மகனைப் பற்றி பெருமையாக பேசிய ரவி மோகன்… வைரலாகும் வீடியோ!

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘ஜாலி ஓ ஜிம்கானா’வின் ஐந்தாவது எபிஸோடில் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டு தனது எளிமையான பேச்சு, நகைச்சுவை உணர்வு மற்றும் மனதைத் தொடும் பகிர்வுகள் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ முதல் ‘பொன்னியின் செல்வன்’ வரை பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரவி மோகன், தற்போது திரைப்படத் தயாரிப்பாளராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். இருப்பினும், தன்னை இன்னும் ஒரு “திரைப்பட மாணவர்” என்றே கருதுவதாக அவர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

தொகுப்பாளர் ஜெகனுடன் உரையாடிய ரவி மோகன், பள்ளி வாழ்க்கையில் சாதாரண மாணவராக இருந்தாலும், கல்லூரி வாழ்க்கையில் தனது உண்மையான ஆர்வத்தை கண்டறிந்ததாக கூறினார். “எனக்கு எதன் மீது உண்மையான ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக என் முழு உழைப்பையும் செலுத்துவேன். அந்த விஷயம் எனக்கு சினிமாதான்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், திரைப்படத் துறையில் தனது பயணம் ஒரு ஸ்பாட் பாயாக தொடங்கியதையும், தன்னை உருவாக்கிய சினிமாவுக்கு நெகிழ்ச்சியான அஞ்சலியை செலுத்தியதையும் அவர் பகிர்ந்துகொண்டார். தனது தந்தை திரைப்படங்களை அவற்றின் ‘சுவை’ மூலமே அடையாளம் காண்பார் என்ற நினைவுகளையும் அவர் மனம் திறந்து பகிர்ந்தார்.

நிகழ்ச்சியின் போது இணையத்தில் தன்னைப் பற்றிய சில கமெண்டுகளுக்கும் ரவி மோகன் சுவாரஸ்யமாக பதிலளித்தார். குறிப்பாக, ஒரு கருத்துக்கு அவர் “அவனை கொஞ்சம் இங்க வர சொல்லு” என்று நகைச்சுவையாக பதிலளித்தது அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘காரசாரம் சேலஞ்ச்’ பகுதியில், எந்த தயக்கமும் இன்றி கலந்துகொண்ட ரவி மோகன், “எனக்கே கார சாப்பாடா?” என்று கலகலப்பாக பேசிய விதம் ரசிகர்களை கவர்ந்தது.

இதே நிகழ்ச்சியில், ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகம் ஏன் உருவாகவில்லை?, தனது திரைப்பயணத்தில் வருந்திய படம் எது?, மீண்டும் இணைந்து நடிக்க விரும்பாத நடிகர் யார்? போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அந்த பதில்கள் என்ன என்பதை அறிய ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின் மிகவும் உணர்வுபூர்வமான தருணமாக, “எந்த நடிகரின் திறமை உங்களுக்கு மகிழ்ச்சியையும் சற்றே பொறாமையையும் தருகிறது?” என்ற கேள்விக்கு, ரவி மோகன் தனது மகன் ஆரவ் ரவியின் பெயரை கூறினார். அதேபோல், திரையுலகில் தான் முழுமையாக நம்பும் நண்பர் நடிகர் கார்த்தி என்றும், “என்னைப் பற்றி அவரும் இதே கருத்தைத்தான் கூறுவார் என நம்புகிறேன்” என்றும் புன்னகையுடன் பகிர்ந்துகொண்டார்.

இறுதியாக, தனது பிரபலமான ‘மக்கமிஷி’ பாடலை பரதநாட்டிய வடிவில் நிகழ்த்தியதோடு, அதே நடன அசைவுகளை தொகுப்பாளர் ஜெகனுக்கும் கற்றுக் கொடுத்து நிகழ்ச்சியை இனிமையாக நிறைவு செய்தார்.

ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், ஐஸ்வர்யா ராஜேஷ், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோட்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் SUN NXT தளத்தில் வெளியாகி வருகின்றன.