ஜீவி பிரகாஷ் – ஸ்ரீநாத் பாஸி மோதல்… எதிர்பார்ப்பை எகிறவைத்த ‘வெக்கை’ போஸ்டர்!

இயக்குநர் பா. இரஞ்சித் வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள, நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரது முதல் படைப்பாக உருவாகியுள்ள ‘வெக்கை’, வித்தியாசமான கதைக்களம் மற்றும் பரபரப்பான திரைக்கதையால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனித்துவமான கிராஃபிக் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் பரபரப்பான சாலையின் நடுவே ஜீவி பிரகாஷ் மற்றும் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஒரு சாதாரண சாலைத் தகராறு எவ்வாறு பலரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது என்பதையே ‘வெக்கை’ திரைப்படம் பேசுகிறது. “ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றுகிறது” என்ற மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மனிதர்களின் அகங்காரம், ஆத்திரம் மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளை ஆழமாக பதிவு செய்கிறது.

இதுகுறித்து இயக்குநர் அகிரன் மோசஸ் கூறுகையில், மனிதர்களின் உணர்வுகள் மற்றும் உளவியல் சிக்கல்களை பின்னணியாகக் கொண்டு, காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் திரில்லராக ‘வெக்கை’ உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை நகரின் பின்னணியில் நடைபெறும் இந்தக் கதையில், ஜீவி பிரகாஷ் துடிப்பும் வேகமும் நிறைந்த இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிராக முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ளார். கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ள நிலையில், சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு மற்றும் லட்சுமி பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டின் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வெக்கை’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.