தமிழ் சினிமாவில் தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், பெரிய கனவுகளும் புதிய முயற்சிகளும் நிறைந்த தயாரிப்பு நிறுவனமாக பாலமுருகன்.அ தலைமையிலான ‘டிராமா கம்பனி’ (Drama Company) தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்த புதிய நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றதுடன், ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஷிவானி நாகாரம் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி சென்னையில் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் மகேஷ் ராஜ், இயக்குநர் சி. பிரேம்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர்கள் மணிகண்டன், கென் கருணாஸ், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ஆவுடையப்பன், நடிகர் ரிஷிகாந்த், இயக்குநர் பிரபு ராம் வியாஸ், மதன், கருப்பையா சி. ராம் உள்ளிட்ட திரைத்துறையின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், டாக்டர் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் மற்றும் ஷிவானி நாகாரம் ஆகியோருடன் ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற யோகலட்சுமி, பிக் பாஸ் புகழ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புதிய தயாரிப்பு நிறுவனம், புதிய இயக்குநர் மற்றும் பல திறமையான கலைஞர்கள் இணையும் இந்த திரைப்படம் குறித்த மேலும் பல அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





