பரதநாட்டியத்தில் புதிய முத்திரை பதித்த P.U. சுப்ரஜா, திரையுலகினர் பாராட்டு

சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனர் மற்றும் இயக்குநரான குரு துளசி அவர்களின் மாணவி P.U. சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.

ஜே. பிரபாகர் – உதயசந்திரிகா தம்பதியரின் மகளான சுப்ரஜா, கடந்த 15 ஆண்டுகளாக குரு துளசியின் வழிகாட்டுதலில் பரதநாட்டியப் பயிற்சி பெற்று வந்தார். அந்த நீண்டகால கலைப் பயணத்தின் முக்கிய சாதனையாக அவரது அரங்கேற்ற நிகழ்வு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது பெற்ற நடிகர், இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தலைமை விருந்தினராக பங்கேற்று சுப்ரஜாவை வாழ்த்தினார். மேலும், பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல பரதநாட்டிய கலைஞர் சாந்தா தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்கினார்.

விழாவில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் ஆபவாணன், காஜா மொய்தீன், வரதராஜன், நடிகர் இளவரசு, ஒளிப்பதிவாளர்கள் ரத்னவேலு, செல்வகுமார், எழுத்தாளர் மற்றும் நடிகர் கவிதா பாரதி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இளம் கலைஞரின் அரங்கேற்றத்தை பாராட்டினர்.

மேலும், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில்வேல் மற்றும் சுங்கத்துறை இணை ஆணையர் டாக்டர் சி. சரண்யா, IRS ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

குரு துளசியின் நட்டுவாங்கம் மற்றும் நடன அமைப்பில் நடைபெற்ற இந்த அரங்கேற்றத்தில், புஷ்பாஞ்சலி முதல் மங்களம் வரை பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நேர்த்தியாக அரங்கேறின. அபிநயம், துல்லியமான அசைவுகள் மற்றும் கலைநயமிக்க வெளிப்பாட்டின் மூலம் சுப்ரஜா தனது திறமையை வெளிப்படுத்தி, அரங்கில் இருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிகழ்வில் தென்காசி சமய்குமார் (வாய்ப்பாட்டு), எஸ்.வி. ரமணன் (மிருதங்கம்), ஆர்.டி. ஜெகதீசன் (வயலின்), நிமல் வர்ஷன் (புல்லாங்குழல்) ஆகியோர் இசையமைத்து நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டினர். ஒப்பனைப் பொறுப்பை கீதா மணிமொழி மேற்கொண்டார்.

திரையுலகினர், கலைஞர்கள், உறவினர்கள், நண்பர்கள், பரதநாட்டிய ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு சுப்ரஜாவின் கலைப் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இளம் தலைமுறையினரிடம் பாரம்பரிய நடனக் கலையின் சிறப்பை எடுத்துச் செல்லும் வகையில் நடைபெற்ற இந்த அரங்கேற்ற விழா, தமிழர் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் கலை மரபின் பெருமையை எடுத்துரைத்த மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.