இந்தியாவின் முன்னணி OTT உள்ளடக்கங்களை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்துள்ளார். ‘சுழல் 2’ வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, பின்னணி இசையில் தனது தனித்துவமான பங்களிப்பை தேசிய அளவில் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ‘சுழல் – சீசன் 2’ மொத்தம் மூன்று முக்கிய பிரிவுகளில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தது. சிறந்த பிராந்திய வெப் தொடர் (Best Series – Regional), சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) – சாம் சி எஸ், மற்றும் சிறந்த நடிகை (Critics – Regional Series) – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்று, இந்தத் தொடர் தனது தரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பின்னணி இசையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சாம் சி எஸ், ஒரு காட்சியின் உணர்ச்சி, மர்மம், பதற்றம், வலி மற்றும் பரபரப்பை இசையின் மூலமே பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமையால் தனித்துவம் பெற்றவர். குறிப்பாக த்ரில்லர் மற்றும் குற்றப்புலனாய்வு கதைகளில் அவரது இசை, கதை சொல்லலின் முக்கிய அங்கமாகவே மாறி விடுகிறது.
‘சுழல் 2’ தொடரில் கிராமிய சூழல், குடும்ப உறவுகள், மர்மங்கள் மற்றும் குற்ற விசாரணை ஆகிய அம்சங்களின் உணர்வை இசையின் மூலம் வலுப்படுத்திய விதம் பாராட்டப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட அவரது பின்னணி இசை, பார்வையாளர்களை கதையோடு ஒன்றிணைக்க முக்கிய காரணமாக அமைந்தது. அந்தப் படைப்பாற்றலுக்கான அங்கீகாரமாகவே இந்த விருது கருதப்படுகிறது.
திரைப்படம், வெப் தொடர் என எந்த வடிவமானாலும், கதையின் தேவையை உணர்ந்து இசையை உருவாக்குவதே தனது பாணி என்பதை சாம் சி எஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வணிக ரீதியிலான இசையையும், கலைநயமிக்க பின்னணி இசையையும் சமநிலையுடன் வழங்கும் அவரது திறமை, இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் பிஸியாக இயங்கி வரும் சாம் சி எஸ், தமிழில் ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், ‘டிமான்டி காலனி 3’ உள்ளிட்ட பல முக்கிய படைப்புகளுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், நடிகர் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்திற்கும் இசையமைப்பாளராக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக தேசிய அளவிலான அங்கீகாரங்களையும், பல மொழித் திரைப்படங்களிலும் வித்தியாசமான இசை முயற்சிகளையும் பதிவு செய்து வரும் சாம் சி எஸ், இந்தியாவின் மிகவும் பிஸியான மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறார். ‘சுழல் 2’ தொடருக்காக கிடைத்துள்ள இந்த விருது, அவரது இசைப் பயணத்தில் மற்றொரு பெருமைக்குரிய மைல்கல்லாக அமைந்துள்ளது.





