இந்திய திரைப்பட உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் தனித்துவமான சாதனைகளைப் படைத்து வரும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், தனது 46-வது ஆண்டு பயணத்தை பெருமையுடன் கொண்டாடி வருகிறது. அந்த வெற்றிப்பயணத்தில் புதிய மைல்கல்லாக, அந்நிறுவனத்தின் ‘அமரன்’ திரைப்படம் 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று முக்கிய விருதுகளை வென்று கவனம் பெற்றுள்ளது.
கமல்ஹாசன் வழங்கியுள்ள இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். தரமான கதைகளையும், திறமையான படைப்பாளிகளையும் முன்னிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் உணர்வுப்பூர்வமான நடிப்பு படத்தின் முக்கிய பலமாக அமைந்த நிலையில், படைப்புக் குழுவின் தொழில்நுட்பத் திறனும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’ திரைப்படம் பெற்ற விருதுகள்:
- சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி
- சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ் குமார்
- சிறந்த படத்தொகுப்பாளர் – ஆர். கலைவாணன்
படத்தின் கதையையும் உணர்வுகளையும் வலிமையாக திரையில் வெளிப்படுத்தியதற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தேசிய விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். காட்சிகளின் உணர்ச்சி ஆழத்தை தனது பின்னணி இசையின் மூலம் உயர்த்திய ஜி.வி. பிரகாஷ் குமாரின் பங்களிப்பும் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், கதையின் ஓட்டத்தை சீராகவும் சுவாரஸ்யமாகவும் வடிவமைத்த ஆர். கலைவாணனின் படத்தொகுப்பும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
இந்த மூன்று தேசிய விருதுகள், தனிப்பட்ட கலைஞர்களின் சாதனையை மட்டுமல்லாமல், தயாரிப்பாளர்களின் தொலைநோக்கு சிந்தனை, படைப்புக் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பு மற்றும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
46 ஆண்டுகளாக இந்திய சினிமாவுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எதிர்காலத்திலும் காலத்தால் அழியாத, அர்த்தமுள்ள திரைப்படங்களை வழங்கும் தனது உறுதியை ‘அமரன்’ திரைப்படத்தின் தேசிய விருதுகள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.






