தமிழ் சினிமாவில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படைப்பாக உருவாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ள கருணாஸ், இப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் என தெரிவித்துள்ளார்.
படம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டதாவது,
“திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்”.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘என்ன விலை’ திரைப்படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் அல்பி ஆண்டனி ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ். இசையமைப்பாளராகவும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஒலி வடிவமைப்பை தபஸ் நாயக் மேற்கொண்டுள்ளார்.
கதையம்சம் மற்றும் உருவாக்கத்திற்காக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கருணாஸின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படைப்பாக உருவாகியுள்ள ‘என்ன விலை’, சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு ரசிகர்களை சந்திக்கவுள்ளது.





