‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பாடலின் தொடக்கம் முதல் இடம்பெறும் பிரம்மாண்டமான காட்சிகள், துடிப்பான இசை மற்றும் ஹிருது ஹரூனின் உற்சாகமான நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.
‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள ஹிருது ஹரூன், தற்போது ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் மூலம் முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக புதிய பரிமாணத்தில் களமிறங்குகிறார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘டைகரியன் ரோர்’ பாடல் அமைந்துள்ளது. பாடலின் முதல் பீட்டிலிருந்தே வேகம் குறையாத இசை, வண்ணமயமான காட்சிகள் மற்றும் ஹிருது ஹரூனின் எனர்ஜி நிறைந்த நடனம் என ரசிகர்களை கவரும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அவரது திரையிருப்பும், நடன அசைவுகளும் பாடலின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கின்றன.
துடிப்பான பெர்கஷன் இசையுடன் பல்வேறு இசைக்கருவிகளின் அடுக்குகளை இணைத்து பாடலுக்கு கொண்டாட்டமான உணர்வை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட். பாடலின் வரிகளை கெலித்தி, தமிழ் ஆதவன் மற்றும் ஆ.பா. ராஜா ஆகியோர் எழுதியுள்ளனர். கெலித்தி மற்றும் தமிழ் ஆதவன் இணைந்து பாடலை பாடியுள்ளனர்.
முதல் சிங்கிளுக்கு கிடைத்துள்ள வரவேற்பு, ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் பாடலுடன் படத்தின் இசை சார்ந்த புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன.
‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தை செல்வ குமார் திருமாறன் எழுதி இயக்கியுள்ளார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் ஹிருது ஹரூனுடன் சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி மொலெட்டி, அந்தோணி தாசன், சாச்சனா நமிதாஸ், ரமேஷ் திலக், பார்த்திபன், வஃபா கதீஜா, பீட்டர் கே, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் ஓஷோ வெங்கட் இசையமைப்பாளராகவும், விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும், கே.பி. நந்து கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
‘டைகரியன் ரோர்’ பாடல் மூலம் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் இசை மற்றும் விளம்பரப் பணிகள் புதிய வேகத்தைப் பெற்றுள்ளன. ஹிருது ஹரூனின் அதிரடியான திரையிருப்பு, விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் எனர்ஜி நிறைந்த இசை ஆகியவற்றின் மூலம், ரசிகர்களுக்கு உற்சாகமான கமர்ஷியல் திரையரங்க அனுபவத்தை வழங்க இப்படம் தயாராகி வருகிறது.





