2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை 18, 2026 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டின் விருதுகளில், தமிழ்த் திரைப்படங்கள் மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று, இந்திய திரைப்பட உலகில் மீண்டும் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளன. தரமான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கலைநயமிக்க படைப்புகளுக்கான தேசிய அளவிலான அங்கீகாரமாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தேசிய விருதுகளில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரித்து, சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த படத்தொகுப்பாளராக ஆர். கலைவாணன் மற்றும் சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றியது. சிறந்த சண்டைப் பயிற்சிக்காக அனல் அரசு கவுரவிக்கப்பட்டதுடன், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது சச்சனா நமிதாஸுக்கு வழங்கப்பட்டது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படமும் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வாகியதுடன், நடிகர் தனுஷ் தனது சக்திவாய்ந்த நடிப்பிற்காக Special Mention தேசிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம், இந்த ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்று மேலும் ஒரு முக்கிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த, சி. பிரேம் குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்கு சிறந்த ஒலிக்கலவை (Best Sound Mixing) பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ் குறும்படமான ‘ப்ளூ’ திரைப்படத்திற்காக டி. எஸ். ஹரி ஹர சுதன், சிறந்த ஒலி வடிவமைப்பாளர் (Best Sound Design) என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
இந்த தேசிய விருதுகள் குறித்து, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சங்கத்தின் தலைவர் டி.ஜி. தியாகராஜன் தயாரித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றிருப்பது, சங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய விருதுகளை வென்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்த அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினருக்கும் TFAPA மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இந்த அங்கீகாரம், எதிர்காலத்தில் மேலும் பல தரமான படைப்புகள் உருவாகும் வகையில் தமிழ்த் திரைப்பட உலகிற்கு புதிய ஊக்கமாக அமையும் என்றும் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






