“தி டார்க் ஹெவன்” பாலாஜி இயக்கத்தில் கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். சுவிஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சக்தி பாலாஜி. இந்த படத்தில் சித்து சித், தர்ஷிகா நவரத்தினராஜா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயகுமார், அருள் டி. சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழகம் – கேரளா எல்லையில் உள்ள மலை கிராமம் ஒன்றில், ஏழு வருடங்களுக்கு ஒருமுறை, ஆண்டின் ஏழாவது மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர். இதற்கு வனதேவதையின் சாபமே காரணம் என நம்பும் கிராம மக்கள், அந்த அமானுஷ்ய சக்தியை சமாதானப்படுத்த பல்வேறு பூஜைகளை செய்து வருகின்றனர். இந்த சூழலில், ஏழாவது மாதத்தின் முதல் நாளில் அந்தக் கிராம காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக சித்து தனது மனைவி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் அங்கு வருகிறார். கிராம மக்களின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சித்து, அந்த மர்மத்தின் பின்னால் இருக்கும் உண்மையை அறிய முயல்கிறார். இதற்கிடையே, கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திடீரென மாயமாகிறார். அவரை தேடி விசாரணை நடத்தும் போது, அவர் ஒரு இளைஞரைத் தேடி சென்றதும், அந்த இளைஞரும் காணாமல் போயிருப்பதும் தெரிய வருகிறது. தொடர்ந்து அந்தப் பெண்ணின் தோழியும் மாயமாக, மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்படுகின்றனர். தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், மூன்று கொலைகளையும் சித்து விசாரித்து வரும் நேரத்தில், அவரது மனைவியும் மற்றொரு ஆணும் கொலை செய்யப்படுகின்றனர். கேரளா சிறையிலிருந்து தப்பிய சைக்கோ கொலையாளியே இந்த ஐந்து கொலைகளுக்கும் காரணம் என காவல்துறை வழக்கை முடித்து வைக்கிறது. ஆனால், அந்த முடிவை ஏற்க மறுக்கும் சித்து, கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க தனியாக களமிறங்குகிறார். கொலைகளுக்கான காரணம் என்ன? உண்மையான கொலையாளி யார்? மர்ம சம்பவங்களுக்கும் சித்துவின் விசாரணைக்கும் என்ன தொடர்பு? என்பதற்கான பதில்களை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லுகிறது ‘தி டார்க் ஹெவன்’.
‘நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லும்’ ‘தி டார்க் ஹெவன்’ என்ற புத்தகம், மர்ம சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் கிராமம் மற்றும் தொடர் கொலைகளின் விசாரணை என மூன்று கதைகள் ஒன்றோடொன்று பயணிக்கின்றன. மூன்றுக்கும் தொடர்பு இருந்தாலும், அவற்றை அவசரப்படாமல் சரியான இடங்களில் இணைத்து சுவாரஸ்யமான கிரைம் திரில்லராக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி.
கொலைகளின் பின்னணி என்ன? கொலையாளி யார்? என்ற கேள்விகளுக்கு பார்வையாளர்கள் தங்களுக்குள் பல்வேறு யூகங்களை உருவாக்கிக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால், அந்த யூகங்களை அடுத்தடுத்து உடைக்கும் திருப்பங்களுடன் கதையை நகர்த்தியிருப்பது படத்தின் முக்கிய பலம்.
மர்ம புத்தகம், வனதேவதை பற்றிய நம்பிக்கை, சைக்கோ கொலையாளி, தொடர் கொலைகள் என பல அம்சங்கள் இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் திரைக்கதையில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இறுதிக் காட்சி வரை சஸ்பென்ஸை தக்கவைத்திருப்பது கவனம் ஈர்க்கிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சித்து, தனது முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல், உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டாமல், தனது விசாரணையின் மூலம் கதையை முன்னெடுத்துச் செல்லும் காவல்துறை அதிகாரியாக சித்து கச்சிதமாக பொருந்தியுள்ளார். குறிப்பாக பதற்றமான சூழல்களில் அவரது முகபாவனைகளும், உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
சித்துவின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகா, மலை கிராமத்து பெண்ணாக வரும் ரித்விகா, காவல்துறை கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பிரதீப் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர். சிறிய கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதால், படத்தில் தோன்றும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
மணிகண்டன் பி.கே.வின் ஒளிப்பதிவு படத்தின் பதற்றமான சூழலுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. பெரும்பாலான காட்சிகள் ஒரே நிலப்பரப்பைச் சுற்றியே படமாக்கப்பட்டிருந்தாலும், வெவ்வேறு கோணங்கள் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் அந்த இடத்தையே பல்வேறு பரிமாணங்களில் காட்டியிருக்கிறார்.
மலைப்பகுதியின் இருள், தனிமை மற்றும் மர்மமான சூழல் ஆகியவை கேமரா மூலம் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சக்தி பாலாஜியின் பின்னணி இசை படத்தின் திரில்லர் அனுபவத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. குறிப்பாக வயலின் இசையை பயன்படுத்தியிருக்கும் விதம் சில காட்சிகளின் பதற்றத்தையும் பயத்தையும் அதிகரிக்கிறது.
ராஜா ஆறுமுகத்தின் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு துணை நிற்கிறது. மூன்று கதைகள் தனித்தனியாக பயணித்தாலும், அவற்றை சரியான தருணங்களில் இணைத்து, கதையின் மீதான ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை தக்கவைத்திருப்பது படத்தொகுப்பின் சிறப்பு.
தொடர் கொலைகள் மற்றும் காவல்துறை விசாரணை என்ற வழக்கமான கிரைம் திரில்லர் களத்தை, வித்தியாசமான பின்னணியுடன் அணுகியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி.
மர்ம புத்தகம், சாபம் குறித்த கிராம மக்களின் நம்பிக்கை, தொடர் கொலைகள், சைக்கோ கொலையாளி என பல்வேறு அம்சங்களை ஒன்றாக இணைத்திருந்தாலும், அவை பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.
குறிப்பாக, ‘கொலையாளி யார்?’ என்ற கேள்விக்கான பதிலை நோக்கி படம் பயணிக்கும் போது, பார்வையாளர்கள் யூகிக்கும் ஒவ்வொரு முடிவையும் மாற்றும் வகையில் திருப்பங்களை வைத்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது.
மொத்தத்தில், மர்மம், தொடர் கொலைகள், காவல்துறை விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் என கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கான பல அம்சங்களுடன் உருவாகியிருக்கிறது ‘தி டார்க் ஹெவன்’. பார்வையாளர்களின் யூகங்களை தொடர்ந்து மாற்றியமைத்து, இறுதிவரை சஸ்பென்ஸை தக்கவைத்திருக்கும் திரைக்கதையும், சித்துவின் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.





