“மண்டாடி” திரை விமர்சனம்

“மண்டாடி” மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் எல்ரெட் குமார், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை ஜி. வி. பிரகாஷ் குமார். இந்த படத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், பாலா சரவணன், அச்சுயுத் குமார், இரவிந்தர விஜய், சச்னா நமிதாஸ், மிதுன் ஜெய் சங்கர, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பாரம்பரியமான பாய்மரப் படகுப் பந்தயத்தில் முகவைப்பட்டினம் மீனவ கிராமம் சார்பில் பங்கேற்கும் அணியை சுஹாஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரது மகனை இளைஞர் மிதுன் கொலை செய்ய முயற்சிக்க, அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. இதையடுத்து சுஹாஸின் ஆட்கள் மிதுனை கொலைவெறியுடன் துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் மிதுன், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறி சென்னையில் வசித்து வரும் சூரியிடம் தஞ்சம் அடைகிறார். மிதுனுக்கு சூரி அடைக்கலம் கொடுத்தாலும், சுஹாஸின் ஆட்கள் அங்கும் வந்து அவனை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இதனால் மிதுனை அழைத்துக்கொண்டு மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார் சூரி. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஊருக்குள் காலடி எடுத்து வைக்கும் நிலையில், அவருடைய பழைய பகை மீண்டும் தலைதூக்குகிறது. ஒருபுறம் பழைய பகை, மறுபுறம் ஊரின் இளைஞர்களை ஒன்றிணைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சி என சூரியின் பயணம் தொடங்குகிறது. பாய்மரப் படகுப் பந்தயத்தில் வெற்றி பெற்று, முகவைப்பட்டினம் அணியில் உள்ளூர் இளைஞர்களை பங்கேற்க வைக்க சூரி முடிவு செய்கிறார். ஆனால், சூரியின் முயற்சியை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல், அவரையே ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்று சுஹாஸ் திட்டமிடுகிறார். இவர்களில் யார் வெற்றி பெற்றார்கள்? 20 ஆண்டுகளுக்கு முன்பு சூரி ஏன் ஊரை விட்டு வெளியேறினார்? சூரி – சுஹாஸ் இடையேயான பகைமைக்கான பின்னணி என்ன? என்பதற்கான விடையே “மண்டாடி”.

தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவற்றின் வழக்கமான பாதையில் பயணிக்காமல், மீனவர்களின் வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. கடல், கரை, மீனவ கிராமத்தின் வாழ்க்கை, உறவுகள், பகை, காதல், துரோகம் என அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர், பாய்மரப் படகுப் பந்தயத்தையும் கதையின் முக்கியமான பகுதியாக மாற்றியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். சூரி கதாபாத்திரத்தை மாஸ் நாயகனாக முன்னிறுத்தினாலும், அவரை சுற்றியுள்ள கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சிறிய கதாபாத்திரங்கள்கூட கதையோட்டத்தில் கவனம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. துரோகத்தால் பகைவர்களாகும் நண்பர்கள், காதல் மற்றும் பிரிவு போன்ற அம்சங்கள் ஏற்கனவே பல படங்களில் பார்த்ததாக தோன்றினாலும், அவற்றை மீனவ வாழ்வியலுடன் இணைத்து காட்சிப்படுத்திய விதமும், பாய்மரப் படகுப் பந்தயத்தை திரைக்கதையின் முக்கியமான திருப்பமாக பயன்படுத்திய விதமும் படத்தை வித்தியாசப்படுத்துகிறது.

முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி, ஒரு மாஸ் ஹீரோவாக தன்னை முழுமையாக நிலைநிறுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் தருணங்களிலும் அவரது உடல்மொழியும் நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது. அதே நேரத்தில் காதல், செண்டிமெண்ட், நட்பு என உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மீனவனின் உடல்மொழி, பேச்சு, கோபம், பாசம் என கதாபாத்திரத்தின் அனைத்து பரிமாணங்களையும் உள்வாங்கி, ‘மண்டாடி’யாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி.

சூரிக்கு இணையான கதாபாத்திரத்தில் சாட்டப்புலியாக நடித்திருக்கும் சுஹாஸ், வில்லன் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு. சூரியுடன் நட்பாக பழகும் காட்சிகளிலும், அதே சூரியை எதிரியாக பார்க்கும் தருணங்களிலும் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக வசனங்களை விட தனது பார்வையின் மூலமாகவே பகை உணர்வை வெளிப்படுத்தும் விதம் கவனம் ஈர்க்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார், அழுத்தமான கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். காதல், காதல் முறிவு மற்றும் வாழ்க்கையை அதன்பிறகு எதிர்கொள்ளும் பெண்ணின் மனநிலையை தனது நடிப்பில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

மச்சமுனி என்ற மூத்த மண்டாடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், மாஸ் மற்றும் க்ளாஸ் கலந்த நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். மாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், ஆரம்பக் காட்சியிலேயே அதிரடியான அறிமுகத்துடன் கவனம் ஈர்க்கிறார். தனது அம்மா சூரியின் முன்னாள் காதலி என்பதை தெரிந்துகொண்ட பிறகு சூரியை எதிர்கொள்ளும் காட்சிகளில் நகைச்சுவையை உருவாக்குவதோடு, எதிர்பாராத உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறும் இளைஞனின் மனநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சூரியின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன், இறுக்கமான காட்சிகளைக்கூட தனது இயல்பான நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் இலகுவாக்குகிறார். அவரது டைமிங் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. மகிமா நம்பியாரின் கணவராக ரவீந்திர விஜய், சுஹாஸின் தந்தையாக ஸ்டண்ட் சிவா, சூரியின் நண்பராக ராம்ஸ், சுஹாஸின் மச்சானாக பத்மன், ஆடுகளம் முருகதாஸ், சுஹாஸின் மகனாக கிரிஷ் ஹாசன் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு ‘மண்டாடி’ படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. கடலையும் கரையையும் வெறும் பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல், அவற்றை கதாபாத்திரங்களின் பயணத்துடன் இணைத்திருக்கிறார். குறிப்பாக பாய்மரப் படகுப் பந்தயக் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. பந்தயத்தின் வேகம் மட்டுமின்றி, அதில் இருக்கும் ஆபத்து, வீரர்களின் உடல்மொழி, கடலின் சீற்றம் என அனைத்தையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகள் பந்தயத்தை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுக்கின்றன.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தோடு பயணித்தாலும், தனியாக மனதில் நிற்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், பின்னணி இசையில் அவர் தனது பலத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக பாய்மரப் படகுப் பந்தயம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்பை அதிகரிக்கிறது. வசனம் இல்லாத பல காட்சிகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

ஈ.ராகவின் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு மிகப்பெரிய பலம். ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களை திரைக்குள் இழுத்துச் செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகள் மற்றும் பாய்மரப் படகுப் பந்தயக் காட்சிகளை ஒன்றோடொன்று இணைத்த விதம் சிறப்பு. கதையின் வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ராகவின் எடிட்டிங், படத்திற்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் மற்றும் பந்தயக் காட்சிகளின் தொகுப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ என மூன்று சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மூவரது உழைப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக கடலையும் கரையையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளும், பாய்மரப் படகுப் பந்தயத்தில் இடம்பெறும் சாகசங்களும் படத்திற்கு பிரமாண்டத்தை கொடுத்திருக்கின்றன.

டி.ஆர்.கே. கிரணின் கலை இயக்கம் இயற்கையான சூழலுடன் கச்சிதமாக பொருந்துகிறது. செயற்கையான செட் மற்றும் இயற்கையான இடம் எது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவரது பணி நேர்த்தியாக அமைந்துள்ளது.

அமீர் ஜமால் கான் மற்றும் மதிமாறன் புகழேந்தி ஆகியோரின் வசனங்கள் எளிமையாக இருந்தாலும், பல இடங்களில் கூர்மையாக இருக்கின்றன. கதாபாத்திரங்களின் குணாதிசயத்துக்கு ஏற்ற வகையில் வசனங்கள் அமைந்திருப்பது சிறப்பு.

‘மண்டாடி’ வழக்கமான மீனவர் வாழ்க்கை திரைப்படம் என்ற எதிர்பார்ப்புடன் சென்றால், அது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்திருந்தாலும், அதற்குள் நட்பு, துரோகம், காதல், பகை, குடும்ப உணர்வு மற்றும் மாஸ் ஆகியவற்றை சரியான அளவில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. சூரியின் மாஸ் நடிப்பு, சுஹாஸின் வில்லத்தனம், பாய்மரப் படகுப் பந்தயக் காட்சிகள், ஆக்‌ஷன் மற்றும் கடலை மையமாக கொண்ட பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் படத்தின் முக்கியமான பலங்கள். தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பை சரியான அளவில் பயன்படுத்தி, காற்றின் திசையையும் நீரோட்டத்தையும் கணித்து பாய்மரப் படகை செலுத்தும் வீரரைப் போல திரைக்கதையை திறம்பட நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

“மண்டாடி” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

“மண்டாடி” கடலும் கரையும் கலந்த ஒரு வித்தியாசமான மாஸ் அனுபவம்.