“சர்தார் 2” பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை சாம் சி.எஸ். இந்த படத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, சின்னி ஜெயந்த், விடிவி கணேஷ், ஷா ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் ஒரு உளவாளியை ரா அமைப்பின் சிறப்பு குழு தேடி வருகிறது. அவர்களை விட முன்னதாக அந்த உளவாளியை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க கார்த்தி முயற்சிக்கிறார். ஆனால், சர்வதேச கூலிப்படை கும்பல் ஒன்று கார்த்திக்கு முன்பாகவே அந்த உளவாளியை கொலை செய்து, அவரிடம் இருக்கும் முக்கியமான ரகசியத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. இறப்பதற்கு முன்பு அந்த உளவாளியிடம் இருக்கும் ரகசியத்தை கார்த்தி கைப்பற்றுவதோடு, தனது தந்தை உயிருடன் இருப்பதையும் அறிந்து கொள்கிறார். தந்தையை தேடி செல்லும் கார்த்திக்கு, இறந்த உளவாளி பாதுகாத்த ரகசியப் பொருளைப் போல மேலும் இரண்டு ரகசியங்கள், இரண்டு வெவ்வேறு உளவாளிகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது. இந்த மூன்று ரகசியங்களையும் கைப்பற்றி, அதன் மூலம் நாட்டையே அழிக்கும் திட்டத்தை செயல்படுத்த சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டேக்கர் திட்டமிடுகிறான். அவனுக்கு முன்பாக அந்த ரகசியங்களை கைப்பற்றி அதன் பின்னணி என்ன என்பதை அறிய முயற்சிக்கும் கார்த்தி, எதிர்பாராத விதமாக தனது தந்தையை மீண்டும் சந்திக்கிறார். மகனும், தந்தையும் இணைந்து நாட்டை அழிக்கும் சதித்திட்டத்தை முறியடிக்க களம் இறங்குகிறார்கள். அந்த சதித்திட்டம் என்ன? அதை அவர்கள் எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள்? பிளாக் டேக்கர் யார்? கார்த்தியின் தந்தை ஏன் தலைமறைவாக வாழ்கிறார்? என்பதற்கான விடையே “சர்தார் 2”.
‘சர்தார்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருந்தாலும், முற்றிலும் வேறொரு பிரச்சனையை மையமாக வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சனையை உளவாளியின் வாழ்க்கை மற்றும் சர்வதேச சதித்திட்டத்துடன் இணைத்து, பிரமாண்டமான ஆக்ஷன் படமாக சொல்லியிருக்கிறார். சமூகப் பிரச்சனையை மையமாக வைத்திருந்தாலும், அதை நேரடியாக பிரச்சாரமாக பேசாமல், ஆக்ஷன், சேசிங், சாகசம் மற்றும் உளவு நடவடிக்கைகளுடன் கலந்து கமர்ஷியல் திரை அனுபவமாக கொடுத்திருப்பது படத்தின் பலம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் திரைக்கதை பயணிக்கிறது. குறிப்பாக பல கதாபாத்திரங்கள், பிளாஷ்பேக், ரா அமைப்பின் பின்னணி, சர்வதேச கூலிப்படை மற்றும் மூன்று ரகசியங்களின் பயணம் என பல அடுக்குகள் இருந்தாலும், அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து கதையை தெளிவாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். வெள்ளந்தியான நபராக ஒரு கதாபாத்திரமும், நாட்டை காப்பாற்ற தனது உயிரையே துச்சமாக நினைக்கும் திறமையான உளவாளியாக மற்றொரு கதாபாத்திரமும் அமைந்திருக்க, இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை தனது உடல்மொழி மற்றும் நடிப்பில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும், ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளில் கார்த்தியின் உற்சாகமான நடிப்பு ரசிகர்களை கவர்கிறது. குறிப்பாக விமான சாகசங்கள் மற்றும் அதிரடி காட்சிகளில் அவரது உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.
சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டேக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியிலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லனாக இருந்தாலும், மக்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்து நீளமாக பேசும் காட்சியில் தனது திரை இருப்பால் கவனம் ஈர்க்கிறார். அந்த நீண்ட காட்சியை தொய்வின்றி கடத்துவதற்கு அவரது நடிப்பு பெரிதும் உதவுகிறது.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் மாளவிகா மோகனன் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆஷிகா ரங்கநாத் படம் முழுவதும் பயணித்தாலும், அவரது கதாபாத்திரம் மனதில் நிற்கும் அளவுக்கு அழுத்தமாக அமைக்கப்படவில்லை. ரஜிஷா விஜயன் ஒரு காட்சியில் மட்டும் தோன்றி மறைகிறார். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியின் காமெடி கூட்டணி படத்தின் இறுக்கமான சூழலை இலகுவாக்குகிறது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா சொல்லும் நீண்ட விளக்கத்தை கேட்டு இருவரும் கொடுக்கும் ரியாக்ஷன்கள் திரையரங்கில் சிரிப்பை வரவழைக்கின்றன.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தை அதிகரித்திருக்கிறது. உளவு நடவடிக்கைகள், சேசிங், ஆக்ஷன் மற்றும் விமான சாகசங்கள் என பல்வேறு காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்ட காட்சிகளிலும் அது செயற்கையானது என்று தெரியாத வகையில் காட்சியமைப்பு அமைந்திருப்பது சிறப்பு.
சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை படத்தின் வேகம் மற்றும் சாகசத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சேசிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் பதற்றத்தையும் பரபரப்பையும் அதிகரிக்கும் வகையில் இசை சிறப்பாக பயணிக்கிறது. குறிப்பாக பிரமாண்டமான சாகசக் காட்சிகளின் தாக்கத்தை மேலும் உயர்த்தி, பார்வையாளர்களை அந்த காட்சிகளுக்குள் இழுக்கும் வகையில் பின்னணி இசை அமைந்திருக்கிறது.
விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு ‘சர்தார் 2’ படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. இரண்டு கதாபாத்திரங்களில் வரும் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யாவின் சர்வதேச கூலிப்படை, ரா அமைப்பின் பிளாஷ்பேக், பல்வேறு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள், ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகள் என ஏராளமான காட்சிகள் இருந்தாலும், அவற்றை குழப்பமின்றி சரியான வேகத்தில் தொகுத்திருக்கிறார். குறிப்பாக சாகசக் காட்சிகளின் வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டிருப்பதோடு, திரைக்கதையின் விறுவிறுப்பையும் தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படமாக இருந்தாலும், பெரிய அளவில் தொய்வு ஏற்படாமல் நகர்த்தியிருப்பது படத்தொகுப்பின் சிறப்பு.
‘சர்தார் 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், புதிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அதிரடி உளவு திரைப்படம். சமூகப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட கதையை ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளுடன் இணைத்து, ஹாலிவுட் பாணியிலான பிரமாண்டமான திரை அனுபவத்தை கொடுக்க இயக்குநர் பி.எஸ்.மித்ரன் முயற்சி செய்திருக்கிறார். கார்த்தியின் இரட்டை வேட நடிப்பு, எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், விமான சாகசங்கள், ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை மற்றும் விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு ஆகியவை படத்தின் முக்கியமான பலங்கள். மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்தாலும், அதை சீரியஸான பிரச்சாரமாக மாற்றாமல் நகைச்சுவை, ஆக்ஷன், சாகசம் என கமர்ஷியல் அம்சங்களோடு கலந்து கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது.





