ஒரே மேடையில் 125 நடன இயக்குநர்கள்… வரலாறு படைத்த ஸ்ரீதர் ஏஆர்எஸ் அகாடமி

முன்னணி நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் வழிநடத்தி வரும் ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, சென்னை முழுவதும் பல்வேறு கிளைகளில் நடனப் பயிற்சி வழங்கி வருகிறது. மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதோடு, நடனக் கலைஞர்களின் பங்களிப்பை மதிக்கும் வகையிலும், அகாடமி தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வரிசையில், அகாடமியின் பிரம்மாண்டமான ‘டான்ஸ் டான் 2’ நிகழ்ச்சி ஜூலை 25 அன்று சென்னை வேல்ஸ் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, தமிழ்த் திரைப்பட நடனக் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதுவரை இல்லாத முயற்சியாக அமைந்தது.

விழாவின் முக்கிய அம்சமாக, 1973 முதல் 2026 வரை தமிழ்த் திரையுலகில் பங்களித்த 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் ஒரே மேடையில் கௌரவிக்கப்பட்டனர். இதனுடன், ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மாணவர்கள் வழங்கிய வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்ரீதர் மாஸ்டர்,

“திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவத்தில், நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்களிலிருந்து இன்றைய தலைமுறை வரை அனைத்து நடன இயக்குநர்களின் பங்களிப்பையும் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டேன். பல்வேறு தகவல்களைத் திரட்டியபோது, 1973 முதல் 2026 வரை 125 நடன இயக்குநர்கள் தமிழ்த் திரையுலகில் பணியாற்றியிருப்பது தெரியவந்தது.

அவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலும் பணியாற்றியவர்கள். இத்தகைய கலைஞர்களையும், மாநிலம் முழுவதும் நடனப் பயிற்சி அளித்து வரும் 38 ஆசிரியர்களையும் ஒரே மேடையில் கௌரவிப்பது எனக்கு பெருமையாக உள்ளது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த 125 நடன இயக்குநர்களில் பலருக்கு தற்போது போதிய வாய்ப்புகள் இல்லை. அதேபோல், பல சிரமங்களுக்கு மத்தியிலும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் ஆசிரியர்களும் அதிக அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள். இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், சமூக அங்கீகாரத்தையும் ஏற்படுத்தும் ஒரு தொடக்கமாக அமைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்,” என்று தெரிவித்தார்.