சர்வதேச அரங்கில் கார்த்திக் சுப்புராஜின் படம்!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், 2026 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டு, சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியதுடன், படக்குழுவினருக்கு உற்சாகமான வரவேற்பையும் அளித்தனர்.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் முக்கியமான படங்கள் இடம்பெறும் TIFF-ன் ‘சென்டர்பீஸ்’ பிரிவில் திரையிடப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படும் கார்த்திக் சுப்புராஜின் இந்த புதிய படைப்பு, சர்வதேச திரைப்பட விழா மேடையில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற முதல் காட்சியில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “நான் நன்கு அறிந்த ஒரு சூழலையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான கதைதான் ‘டோரதி’. ஆனால், இதில் இடம்பெறும் நட்பு, மனிதர்களுக்கிடையேயான உறவு, பாகுபாடு போன்ற கேள்விகள் எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் பொருந்தக்கூடியவை. TIFF-ல் இப்படம் உலகளவில் முதன்முறையாகத் திரையிடப்படுவது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். நான் சொல்ல நினைத்த கதையின் உணர்வை எந்த சமரசமும் இல்லாமல் உலக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு, இளையராஜா சாரின் இசை இப்படத்தின் பயணத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது,” என்றார்.

ஜியோ ஸ்டுடியோஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில், “‘டோரதி’ பேசும் விஷயங்களும் அதன் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையும் மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும் வலிமை கொண்டவை. நட்பு, அடையாளம், மனித கண்ணியம் ஆகியவற்றை மையமாக வைத்து கார்த்திக் சுப்புராஜ் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் வாயிலாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். TIFF-ல் இப்படம் இடம்பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கு முக்கியமான தருணம்,” என்றார்.

சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் கூறுகையில், “TIFF போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரையிடப்பட்டிருப்பது எங்களது பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து சிறந்த திறமைகளை ஒன்றிணைத்துள்ளனர். இந்தியாவில் உருவாகும் வலிமையான கதைகள் உலகின் எந்தப் பகுதி பார்வையாளர்களையும் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையே இந்த கூட்டணிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. டொராண்டோவில் ‘டோரதி’ தனது சர்வதேச பயணத்தைத் தொடங்கியிருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி,” என்றனர்.

இப்படத்தின் இசைக்கு இசைஞானி இளையராஜா பங்களித்துள்ளார். திரைப்படத்தின் அசல் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் யூடியூபில் தலா ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. மேலும், இந்த இரு பாடல்களும் யூடியூப் இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் இசை வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து ‘டோரதி’ திரைப்படத்தின் 18 பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகள் அடங்கிய பிரத்யேக நேரடி இசை நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது. இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘டோரதி கான்சர்ட்’ நிகழ்ச்சியில் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து இப்படத்தின் இசையை இசைக்கலைஞர்கள் நேரடியாக இசைத்தனர். ரசிகர்களிடமிருந்து இந்த இசை நிகழ்ச்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தயாரிப்பாளர் குணீத் மோங்கா கபூருக்கும் TIFF திரைப்பட விழாவிற்கும் இடையே 15 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்பு இருந்து வருகிறது. ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ (2010), ‘பெட்லர்ஸ்’ (2012), ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் – பாகம் 1 மற்றும் 2’ (2012), ‘தி லஞ்ச்பாக்ஸ்’ (2013), ‘மான்சூன் ஷூட்அவுட்’ (2014), ‘கில்’ (2023), ‘யெல்லோ பஸ்’ (2023) உள்ளிட்ட அவரது தயாரிப்புகள் TIFF-ல் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது ‘டோரதி’ திரைப்படமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இதன் மூலம் சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் சர்வதேச திரைப்பட விழா பயணம் தமிழ் சினிமாவிலும் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்துள்ள இந்தப் படைப்பு, உலக அரங்கில் தமிழ் சினிமாவின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டோரதி’, வரும் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் வழங்குகின்றன.