அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். அந்த வகையில் வெளியாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு கார்த்திக் நேத்தா வரிகள் எழுதியிருக்க, சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.
முன்னதாக வெளியான “ஆசை வரமே” பாடல் காதலின் அழகான தருணங்களையும், காதலர்களுக்கிடையேயான நெருக்கத்தையும் மையப்படுத்தியிருந்தது. அதற்கு மாறாக, “கல்லா நிக்கிறியே” பாடல் காதலின் வலியான பக்கத்தை வெளிப்படுத்துகிறது. பிரிவு, ஏக்கம், காதலியின் மீதான தீராத உணர்வு என பல்வேறு மனநிலைகளை இந்தப் பாடல் பதிவு செய்கிறது.
கார்த்திக் நேத்தாவின் உணர்வுப்பூர்வமான வரிகளுக்கு கோவிந்த் வஸந்தாவின் இசை அழுத்தம் சேர்க்கிறது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் குரலில் வெளிப்படும் சோகம் மற்றும் காதல் உணர்வு பாடலுக்கு கூடுதல் உயிரோட்டத்தை வழங்கியுள்ளது. காதலில் பிரிவை அனுபவித்தவர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் அமைந்துள்ளது.
பாடலுடன் வெளியிடப்பட்டுள்ள காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கோவிந்த் வஸந்தா மற்றும் சித் ஸ்ரீராம் இடம்பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் காதல் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைந்துள்ள இந்த விஷுவல்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன.
‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
காதல், பொழுதுபோக்கு மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





