புராண பிரம்மாண்டமாக உருவாகும் “மஹாகாளி” போஸ்ட் புரொடக்ஷனுக்கு தயாராகும் படக்குழு!

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் அடுத்த முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் ‘மஹாகாளி’, படப்பிடிப்பின் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. RKD Studios தயாரிப்பில் உருவாகும் இந்த புராண காவியத் திரைப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக முன்னேறி வருகிறது.

தயாரிப்பாளர்களான ஆர்.கே. துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்திற்கு, பிரசாந்த் வர்மா கிரியேட்டராக செயல்பட, பூஜா அபர்ணா கொல்லுரு இயக்கத்தை மேற்கொள்கிறார். இந்திய புராணக் கதைகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் உருவாகும் இந்த திரைப்படம், IMAX திரையரங்கு வடிவத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டு, ரசிகர்களுக்கு வித்தியாசமான காட்சியனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். இதற்கு முன்பே, சுக்ராச்சார்யா என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா, தனது பகுதிகளின் படப்பிடிப்பை நிறைவு செய்திருந்தார்.

திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமான மஹாகாளி வேடத்தில் பூமி ஷெட்டி நடிக்கிறார். அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியபோது, தெய்வீகத்துடனும் உக்கிரத்துடனும் கூடிய தோற்றம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல், அக்ஷய் கன்னாவின் சுக்ராச்சார்யா தோற்றமும் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள ‘மஹாகாளி’, ஆன்மிகக் கதையையும், சர்வதேச தரத்திலான காட்சியமைப்பையும் இணைக்கும் மிகப்பெரிய புராண திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவை கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா மேற்கொள்கிறார்.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான முன்னேற்பாடுகளிலும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தி வரும் நிலையில், ‘மஹாகாளி’ சமீப கால இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான புராணத் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்த கட்ட புரமோஷன் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.