தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 171வது திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் தயாரிக்க, பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணை தயாரிப்பாளராக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இந்த புதிய தயாரிப்பு கூட்டணி குறித்த அறிவிப்பு, நடிகர் சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது.
பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் உருவாகும் இந்த திரைப்படம், மிகப்பெரிய அளவில் தயாராக உள்ளது. நீண்டகால திரைப்படத் தயாரிப்பு அனுபவம் கொண்ட பி. எல். தேனப்பனின் பங்களிப்பு, படத்தின் தயாரிப்பு தரத்தை மேலும் உயர்த்தும் என திரையுலகில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சரத்குமார் ரசிகர்களிடையிலும், திரைப்பட வர்த்தக வட்டாரங்களிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். விஜய் பார்கவ் கதையை எழுதியுள்ளார். படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை ஆதிரா தில்ஜித், தமிழ் மார்க்கெட்டிங்கை சரண், தமிழ் பி.ஆர்.ஓ. பணிகளை சதிஷ் (AIM) கவனித்து வருகின்றனர்.
படக்குழுவின் அறிவிப்பின்படி, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





