உன்னி முகுந்தனின் 50வது படம்… இயக்குநராகவும் அறிமுகமாகும் “மார்கோ” நாயகன்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ திரைப்படத்தின் மூலம் பான் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகர் உன்னி முகுந்தனின் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) நிறுவனத்துடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உன்னி முகுந்தன் எழுத்தாளராகவும் இயக்குநராகவும் புதிய பொறுப்பை ஏற்கிறார்.

தேசிய விருது பெற்ற பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் முதன்முறையாக இணையும் திரைப்படம் இது. மொழிகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் தரமான படைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த கூட்டணி உருவாகியுள்ளது.

‘ஓம்காரா’, ‘ஸ்பெஷல் 26’, ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ரெய்டு’, ‘ஷைத்தான்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ள பனோரமா ஸ்டுடியோஸ், ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் மூலமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட முக்கிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. ‘த்ரிஷ்யம் 2’ படத்தை இயக்கிய அபிஷேக் பதக், தற்போது ‘த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படத்தை இயக்கி, தயாரித்தும் வருகிறார். இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மறுபுறம், ‘மார்கோ’ திரைப்படத்தின் பான் இந்திய வெற்றிக்குப் பிறகு உன்னி முகுந்தன் இந்திய அளவில் கவனம் பெற்ற மலையாள நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். அதே நேரத்தில், அவர் தொடங்கிய உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் நிறுவனம் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘மேப்படியான்’ தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பனோரமா ஸ்டுடியோஸுடன் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் இணைந்திருக்கும் இந்த புதிய திரைப்படம் பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இது உன்னி முகுந்தனின் 50வது திரைப்படமாக அமைவதுடன், அவர் முதல்முறையாக இயக்குநர் பொறுப்பையும் ஏற்கும் படமாக உருவாகிறது. அதிரடி மற்றும் விறுவிறுப்பு நிறைந்த கதைக்களத்துடன் உருவாகும் இப்படம் பான் இந்திய அளவில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பனோரமா ஸ்டுடியோஸ் சேர்மன் குமார் மங்கத் பதக் பகிர்ந்து கொண்டதாவது,

“உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் இந்த மலையாள திரைப்படத்திற்காக இணைவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உன்னி தன்னை ஒரு வலுவான பான் இந்திய நட்சத்திரமாக நிலைநிறுத்தியுள்ளார். குறிப்பாக, தனது 50வது திரைப்படத்தில் எழுத்து, இயக்கம் என்ற பொறுப்புகளை அவர் ஏற்றிருப்பது எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ரசிகர்களைப் போலவே, நாங்களும் இந்தத் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

பனோரமா ஸ்டுடியோஸ் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக் கூறியதாவது,

“உன்னியின் சமீபகால திரைப்படங்களை கவனித்து வருகிறேன். அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களிலும் திரைப்படங்களிலும் அவர் வெளிப்படுத்தும் நம்பிக்கையும் தெளிவும் எப்போதும் என்னை கவர்ந்துள்ளன. ‘மேப்படியான்’ முதல் ‘மார்கோ’ வரை, வெவ்வேறு பாதைகளில் பயணிக்கவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளவும் அவர் தயாராக இருப்பதை நிரூபித்துள்ளார். இந்தத் திரைப்படம் குறித்து நாங்கள் பேசியபோது, நிச்சயம் இந்தப் படத்தை இணைந்து உருவாக்க வேண்டும் எனத் தோன்றியது. இப்போது அவரது ஐம்பதாவது திரைப்படத்தில், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக பொறுப்பேற்கிறார். நிச்சயம் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும்” என்றார்.

இதுகுறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்து கொண்டதாவது,

“எனது ஐம்பதாவது திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை எழுதி, இயக்குவது எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது. எனது சொந்த கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துள்ளது. அதற்கான சரியான கதையும், சரியான தருணமும் இதுதான் என்று உணர்ந்தேன். குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இந்தத் திரைப்படம் பல்வேறு மொழிகள் பேசும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும்” என்றார்.

இப்படத்தின் தலைப்பு, நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.