மர்மம் நிறைந்த “விடியும் காத்திரு” திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. Friends Production House தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்க, அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோரின் படங்களுக்கான கதை விவாதங்களில் பணியாற்றிய ஆர். அரவிந்த ராஜன், ‘விடியும் காத்திரு’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எம்.எஸ். பாஸ்கருடன் அம்ஜதா ஷெரின் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோபி அயோத்தி காவல்துறை அதிகாரியாகவும், பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

க்ரைம் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, கொலை நடந்ததாக கூறப்படும் ஒரு வீட்டிற்குள் விசாரணைக்காக செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளைச் சுற்றி நகர்கிறது. அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத அமானுஷ்ய நிகழ்வுகள் கதைக்கு திருப்பங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கதவின் சிறிய சாவித் துவாரத்தின் வழியாக அச்சத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதே கதவில் காணப்படும் “You Are Next” என்ற வாசகம், படத்தின் மர்மத்தையும் திகில் நிறைந்த கதைக்களத்தையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை கவனிக்கிறார். மெட்ரோ மகேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பை மேற்கொள்கிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். மர்மம், க்ரைம், திகில் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்துள்ள ‘விடியும் காத்திரு’, எம்.எஸ். பாஸ்கரின் வித்தியாசமான கதாபாத்திரத்திற்காக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.