காதலால் மாறும் ஒரு வாழ்க்கை… “ஏன் என்னை ஏதோ செய்தாய்” டீசர் வெளியீடு!

எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனாக டி. ஆண்டனி பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல், உணர்வு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்ட இந்த ரொமான்டிக் டிராமா, வெளியான டீசர் மூலமாகவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

காதலின் ஆழமான உணர்வுகளை காட்சிகளாலும் இசையாலும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பாரம்பரிய காதல் கதைகளின் நெகிழ்ச்சியையும், இன்றைய தலைமுறை ரசிகர்களின் ரசனைக்கேற்ற நவீன திரைக்கதை அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுவயதிலேயே தாயை இழந்து தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவர், மதுப்பழக்கத்தின் காரணமாக வாழ்க்கையின் இருண்ட பாதையில் சிக்கிக்கொள்கிறார். அப்போது அவரது வாழ்க்கையில் நுழையும் காதல், அவரை எவ்வாறு மாற்றி புதிய நம்பிக்கையுடனும் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வழிநடத்துகிறது என்பதையே இந்த திரைப்படம் உணர்வுபூர்வமாகச் சொல்கிறது.

வெளியாகியுள்ள டீசர், கதாநாயகனின் தனிமை, மனவேதனை மற்றும் காதலால் நிகழும் மாற்றத்தை அழகிய காட்சிகளின் வழியே வெளிப்படுத்துகிறது. காதலின் மென்மையும், வாழ்க்கையின் வலிகளும் சமநிலையுடன் சித்தரிக்கப்பட்டிருப்பதால், டீசர் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக, முழுப் படமும் லைவ் சவுண்ட் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து பாடல்களும் நேரடி இசைக்கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இயல்பான ஒலியமைப்பும், புதிய திரையரங்கு அனுபவமும் கிடைக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Anthony’s Atelier நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், டி. ஆண்டனியுடன் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை டி. ஆண்டனி கவனித்துள்ளார். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்திருக்கிறார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி எழுதியுள்ளனர். ஒலிப்பதிவை ஜெய்கார் ஹரிநாத், சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன், கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் செயல்பட்டுள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 21 அன்று திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

உணர்வுகளும் இசையும் இணையும் காதல் அனுபவத்தை வழங்கவுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.