“அன்பே டயானா” திரை விமர்சனம்

“அன்பே டயானா” பரி இளவழகன் இயக்கத்தில் யுவராஜ் கணேசன், சத்ய கரிகாலன் மற்றும் டி நரேன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பரத் சங்கர். இந்த படத்தில் பரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன் கடம்பி, ரோஜா செல்வமணி, கோபி அரவிந்த், செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒருதலைக் காதலை மையமாகக் கொண்டு, நகைச்சுவை, குடும்ப உறவுகள், உணர்வுகள் ஆகியவற்றை இயல்பாக இணைத்து, மனதை வருடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘அன்பே டயானா’.

பெரம்பூரைச் சேர்ந்த இளைஞனான பாரி இளவழகன், கல்லூரி நாட்களிலிருந்தே ஆங்கிலோ-இந்திய பெண்ணான ரம்யா ரங்கநாதனை காதலித்து வருகிறார். பல ஆண்டுகளாக அவரது சம்மதத்துக்காக காத்திருக்கும் நிலையில், ஒரு நாள் காதலை ஏற்றுக்கொள்ளும் ரம்யா, அதற்கு நேர்மாறாக பாரியிடமிருந்து விலகலை சந்திக்கிறார். காதல் நிறைவேறும் தருணத்தில் நாயகன் ஏன் பின்வாங்குகிறார் என்பதே “அன்பே டயானா” படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.

கதாநாயகனாக நடித்துள்ள பாரி இளவழகன், எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல், நம் வீட்டுப் பையனைப் போல இயல்பாக நடித்திருக்கிறார். காதல், குழப்பம், குடும்ப பாசம் என அனைத்து உணர்வுகளையும் மிக எளிமையாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

ரம்யா ரங்கநாதன், டயானா கதாபாத்திரத்தில் படத்தின் மிகப்பெரிய பலமாக மிளிர்கிறார். ஆங்கிலோ-இந்திய பெண்ணின் பேச்சு, உடல்மொழி, குறும்பு, கோபம் என அனைத்தையும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பதோடு, நகைச்சுவை காட்சிகளில் தியேட்டரை சிரிப்பால் நிரப்புகிறார்.

சேத்தன் நடித்துள்ள தந்தை கதாபாத்திரம் படத்தின் ஆச்சரியமான பலம். வீட்டில் மனைவிக்கு பயப்படும் கணவராகவும், குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் தந்தையாகவும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது. ரோஜா, கண்டிப்பான தாயாக கம்பீரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக இறுதிக்கட்ட உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.

பரிதாபங்கள் கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.

ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு பெரம்பூரின் அழகை புதிதாக அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக ஏரியல் ஷாட்கள் மற்றும் இயற்கை ஒளியில் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்திற்கு தனி அழகை சேர்க்கின்றன.

பரத் சங்கர் இசையில் பாடல்கள் இதமாக ஒலிக்கின்றன. பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கிறது. பார்த்தா எம்.ஏ.-வின் படத்தொகுப்பு திரைக்கதையின் ஓட்டத்தை சீராக தக்க வைத்திருக்கிறது.

எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என மூன்று பொறுப்புகளையும் ஏற்றுள்ள பாரி இளவழகன், எளிமையான காதல் கதையை வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான வசனங்கள் மூலம் சுவாரஸ்யமான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக மாற்றியிருக்கிறார். முதல் பாதி மென்மையாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் வேகமெடுத்து பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கிறது.

காதல் கதையை மட்டுமல்லாமல், சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளை அன்பு மட்டுமே தாண்டிச் செல்லும் என்ற கருத்தையும் மிக எளிமையாக பதிவு செய்திருப்பது படத்தின் கூடுதல் பலம்.

“அன்பே டயானா” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

சிரிக்கவும், ரசிக்கவும், குடும்பத்துடன் மனநிறைவாக பார்க்கவும் ஏற்ற அழகான காதல் படம்.