13 ஆண்டுகளாக கல்விச் சேவை தொடரும் விஷால்; 20 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி உதவி!

நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில் செயல்பட்டு வரும் “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை” மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கி வருகிறார். குறிப்பாக கொரோனா காலகட்டத்திலும் தனது கல்விச் சேவையை நிறுத்தாமல், அதிகமான மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, அவர்கள் உயர்கல்வி பயில தேவையான முழு உதவிகளையும் இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், தந்தையை இழந்தவர்கள், குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவாக உள்ளவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் உயர்கல்வி தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் ஆகியோரில் முதல் கட்டமாக 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சத்யபாமா பல்கலைக்கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, நெல்லை நாடார் கல்லூரி, ஏ.சி.எஸ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், இந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை செய்து வருகிறது.

கடந்த 13 ஆண்டுகளில், இந்த அறக்கட்டளை மூலம் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி கற்று, இன்று பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும், உயரிய பொறுப்புகளிலும் பணியாற்றி வருகின்றனர். மேலும், அவர்கள் தங்களை உயர்த்திய இந்த அறக்கட்டளையின் சமூகப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று, புதிய மாணவர்களை அடையாளம் காணும் பணியிலும் உதவி செய்து வருகின்றனர்.

அறக்கட்டளையின் முன்னாள் பயனாளிகளின் உதவியுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் முதல் கட்டமாக 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களை தேர்வு செய்யும் அடுத்தகட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கல்வி மூலமாக சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் நடிகர் விஷாலின் இந்த முயற்சி, பல ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வருகிறது.