ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில் உருவாகியுள்ள ‘பொருநை’ ஆவணப்படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. தாமிரபரணி (பொருநை) நதிக்கரையில் 2020-21 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், துருக்கியில் நடைபெறும் புகழ்பெற்ற Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிட தேர்வாகியுள்ளது.
முன்னதாக ‘தமிழி’ ஆவணப்படத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ள ‘பொருநை’, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவியல் ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை காத்திருந்து, பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை பிரதீப்குமார் மற்றும் இளங்கோ சம்பத்குமார் இணைந்து இயக்கியுள்ளனர். ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் குரல் நெறியாளராக பணியாற்றியுள்ளார்.
தொல்லியல் மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் இந்த முயற்சியாக, துருக்கி திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் ஆவணப்படம் என்ற பெருமையையும் ‘பொருநை’ பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள விழாவில் இதன் திரையிடல் நடைபெற உள்ளது.






