“சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடல் வைரல் – அங்கீகாரம்’ படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரெய்லர் வெளியீட்டிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இப்படம், தற்போது தனது இசையின் மூலமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜிப்ரான் இசையமைப்பில், ‘Contempt of Time’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். சட்டம், சமூகம், நீதி மற்றும் அங்கீகாரம் குறித்து கேள்வி எழுப்பும் வலுவான வரிகளுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமி தனது உணர்வுபூர்வமான குரலில் பாடியுள்ளார். பாடலின் வரிகளும் இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டு பின்னணியில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் மறைக்கப்பட்ட சிக்கல்களை பேசுகிறது. தனது அங்கீகாரத்திற்காக நீதிமன்றம் வரை போராடும் ஒரு தடகள வீரனின் உணர்ச்சிப்பூர்வமான பயணமே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.

படத்தின் முக்கிய அம்சமாக, சுமார் ரூ.75 லட்சம் செலவில் பிரம்மாண்டமான நீதிமன்ற வளாக செட் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தின் காட்சியமைப்பும் நம்பகத்தன்மையும் மேலும் உயர்ந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

பிரசாந்த், அஜித்பாஸ்கர் மற்றும் அருண்முருகன் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.