தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இந்த மனிதநேயத் திரைப்படம், நிதி நெருக்கடியில் சிக்கிய ஓட்டுநர் ஒருவர் தனது முதலாளியின் காரை ரகசியமாக டாக்ஸியாக இயக்கும் சூழலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பணம், குடும்பம், மன அமைதி மற்றும் வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ள இப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் அபிநயா ஆகியோரும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
‘கார்மேனி செல்வம்’ படம் முடிந்த பிறகும் ஒரு முக்கியமான கேள்வியை பார்வையாளர்களிடம் எழுப்புகிறது — “மன அமைதி, நேரம் மற்றும் குடும்பத்தை இழந்த பிறகு கிடைக்கும் நிதி சுதந்திரம் உண்மையில் மதிப்புள்ளதா?”
படத்தின் OTT வெளியீடு குறித்து இயக்குநர் ராம் சக்ரி கூறுகையில், “இந்த படம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இப்போது அமேசான் பிரைம் வீடியோ மூலம் அது சாத்தியமாகியுள்ளது” என்றார்.
யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ஜெகன் ஆர்.வி மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பு செய்துள்ளனர். மியூசிகிளவுட் ஸ்டுடியோஸ் மற்றும் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
மனிதர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உணர்வுகளை யதார்த்தமாக பிரதிபலிக்கும் ‘கார்மேனி செல்வம்’, திரையரங்குகளுக்குப் பிறகு OTT தளத்திலும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





