காயிதே மில்லத் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி செலுத்த வேண்டும்; நடிகர் ஜெ.எம். பஷீர் வேண்டுகோள்

தேவர் திரைப்பட நடிகர் ஜெ.எம். பஷீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய், காயிதே மில்லத் பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெறச் செய்து அமைச்சரவைப் பதவி வழங்கிய தலைவர் விஜய் என்றும், சிறுபான்மை மக்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காயிதே மில்லத் வலியுறுத்திய இஸ்லாமிய பெண்களின் சம உரிமை கொள்கையை முன்னெடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒரு இஸ்லாமிய பெண்ணை சட்டமன்ற உறுப்பினராக உயர்த்தியிருப்பது முக்கியமான நிகழ்வாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அரசு உறுதியாக செயல்படும் என சட்டமன்றத்தில் அறிவித்த விஜயின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும், முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய முடிவு அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என்றும் ஜெ.எம். பஷீர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜூன் 5ஆம் தேதி காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.