“இந்த ஊர்தான் என்னை ‘எல்லம்மா’ படத்திற்கு சம்மதிக்க வைத்தது!” – தேவி ஸ்ரீ பிரசாத்

தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்ற தேவி ஸ்ரீ பிரசாத், அங்குள்ள பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மனதை நெகிழச்செய்யும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஜாத்தாரா திருவிழா கொண்டாட்டத்தின் போது, தனது பூர்வீக இல்லத்தில் தங்கி கிராம மக்களுடன் நேரம் செலவிட்ட அவர், விழாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார உற்சாகத்தில் முழுமையாக கலந்து கொண்டார். அந்த அனுபவங்களையும், ஊரின் பாரம்பரியத்தையும், மக்களின் அன்பையும் பதிவு செய்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “என் அப்பா பிறந்த கிராமம் வேதுருபாகா. சிறு வயதில் இருந்தே சென்னையிலிருந்து எங்களை அடிக்கடி இங்கு அழைத்து வந்து, இயற்கை அழகையும் கிராம வாழ்க்கையையும் உணரச் செய்தார்கள். நம்முடைய மக்களுடனும் கலாச்சாரத்துடனும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த கிராமத்தில் அழகான வீடு கட்டியிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “கலாச்சாரம், நாட்டுப்புறக் கலை மற்றும் தெய்வீகத்தின் அழகை எனக்கு கற்றுத்தந்த இந்த ஊர்தான் என்னை ‘எல்லம்மா’ படத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் தனது சொந்த ஊர் மக்களுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பையும், ‘எல்லம்மா’ திரைப்படத்தின் ஆன்மாவையும் இந்த வீடியோ ரசிகர்களுக்கு அழகாக அறிமுகப்படுத்தியுள்ளது.

தில்ராஜு வழங்கும் இந்த திரைப்படத்தை வேணு யெல்தண்டி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சிரீஷ் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.