வைபவ் நடிக்கும் ஆன்மீக ஆக்சன் படப்பிடிப்பு தொடக்கம்

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் அம்சங்கள் இணைந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் “தத் த்வம் அஸி” படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) பூஜையுடன் இனிதே தொடங்கியது. தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், வெறும் மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படக்குழுவின் துல்லியமான திட்டமிடலும் அர்ப்பணிப்பும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு துவக்க விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வு படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்துவதில் தனித்துவம் கொண்ட அவர், இந்த படத்திலும் அதே உணர்வை திரையில் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.

பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில், ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை JK சரவணா மற்றும் JK சதீஷ் தயாரிக்கின்றனர். இசையை பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் KL மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்ற, சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.

எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.

மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு முக்கியமான படைப்பான “ஆர்ய கேரள வர்மன்” திரைப்படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளும் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.