பிரபல திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி, இன்று மதியம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகனை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின்போது, தான் எழுதியுள்ள ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ என்ற நூலின் நோக்கம், அதன் சமூகத் தேவை மற்றும் கல்வி சார்ந்த முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
உலகம் முழுவதும் உருவான தரமான சிறார் திரைப்படங்களையும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகத் தரத்திலான சிறார் படைப்புகளையும் ஒருங்கிணைத்து, குழந்தைகளுக்கான சினிமா ரசனையை ஒரு வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்த நூலின் முக்கிய நோக்கமாகும்.
இச்சந்திப்பின் போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்:
“ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள் உடல் ஆரோக்கியத்திற்காக 35 தடுப்பூசிகளுக்கு மேல் போடுகிறோம். அதுபோல, அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும் ரசனை வளர்ச்சிக்கும் இந்த சினிமா ரசனை கல்வி ஒரு முக்கியத் தடுப்பூசியாக இருக்கும். இது பிஞ்சு மனங்களிலே நஞ்சு கலக்காமல் தடுத்து, கிராமப்புற எளிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் அசல் சினிமாவை அறிந்து, தர்க்கபூர்வமான சிந்தனையாளர்களாக வளர வழிவகுக்கும். இந்த பரந்த பாரத தேசத்தின் குழந்தை மனங்களில் நல் உணர்வுகளை பிள்ளை பிராயத்திலேயே வளர்க்க சினிமா ரசனை கல்வி பெரிதும் உதவும்” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி தொகுத்துள்ள உலகத்தரம் வாய்ந்த சிறார் திரைப்படங்களின் விவரங்களையும், நூலின் உன்னத நோக்கத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார். “இத்தகைய முயற்சி இந்த நாட்டுக்கு மிக முக்கியமானது; இதன் மூலம் நம் நாட்டு குழந்தைகளுக்கு மிகப்பெரிய நன்மையை நாம் செய்வோம்” என்று பாராட்டிய அமைச்சர் அவர்கள், ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளும் பயனடையும் வகையில், இந்நூலை இந்தியாவின் முக்கிய 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும், ஏற்பாடுகளையும் மத்திய அரசு சார்பில் செய்வதாக நெஞ்சார வாக்குறுதி அளித்து வாழ்த்தினார்.
மத்திய அரசின் இந்த மகத்தான அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, “சினிமா ரசனை கல்வி இந்தியா முழுக்கச் செல்வதற்கு, ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளின் கரங்களால் மாண்புமிகு அமைச்சரின் கரங்களைப் பற்றி நான் என் நன்றியைக் கூறினேன்” என இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.





