வித்தியாசமான கதைக்களங்களும் மாஸ் ஆக்ஷன் திரைப்படங்களும் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா திரைப்படம் “ஸ்லம் டாக்”. “33 Temple Road” என்ற துணைத் தலைப்புடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, “ஸ்லம் டாக்” திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் வன்முறை நிறைந்த உலகத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” உள்ளிட்ட படங்களில் தனது பின்னணி இசையின் மூலம் கவனம் ஈர்த்தவர். இவர் “ஸ்லம் டாக்” திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ள “ஸ்லம் டாக்”, ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. டீசர் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.






