வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், தமிழகத்தின் முதல் ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளமான ‘கதைஷார்ட்ஸ்’ (KadhaiShorts) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரண் தயாநிதி மாறன் இந்த புதிய தளத்தை அறிமுகப்படுத்தினார். மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘குட்டி சீரிஸ்’ என்ற வடிவில், இரண்டு நிமிட சினிமா தரத்திலான எபிசோடுகளுடன் கூடிய மைக்ரோ டிராமாக்களை கதைஷார்ட்ஸ் வழங்க உள்ளது.
தொடக்கத்தில் தமிழில் மட்டும் இயங்கவுள்ள இந்த தளம், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மண்ணின் கலாச்சாரம், வட்டார வழக்கு, உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரிஜினல் கதைகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை வெளியிட கதைஷார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், பார்வையாளர்கள் வெறும் ரூ.20 செலுத்தி இந்த மைக்ரோ டிராமாக்களை செயலியில் கண்டு களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.
கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.
கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், “சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.
மேலும், வெர்டிக்கல் மைக்ரோ டிராமா துறைக்கான புதிய தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் ‘கதை கிளப்’ என்ற புதிய முயற்சியையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள் மற்றும் பல்வேறு படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் இந்த முயற்சியின் மூலம், 2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கையும் கதைஷார்ட்ஸ் நிர்ணயித்துள்ளது.
மேலும், கதை சொல்லலுடன் இயல்பாக இணையும் வகையில் பிராண்ட் இன்டக்ரேஷன் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான புதிய மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கதைஷார்ட்ஸ் தெரிவித்துள்ளது.





