“காட்டாளன்” பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஷரீஃப் முஹம்மது தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பி. அஜனீஷ் லோக்நாத் மற்றும் ரவி பஸ்ரூர். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில் கபீர் துஹான் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களை அச்சுறுத்தி யானை தந்தங்களை கடத்தும் கொடூர கும்பலின் தலைவனாக சுனில் செயல்படுகிறார். அவரது சட்டவிரோத பேரரசை கைப்பற்ற நினைக்கும் கபீர் துகான் சிங், காவல்துறையின் உதவியுடன் சுனிலின் கடத்தல் வலையமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறார்.
இந்த சூழலில், சுனிலின் நம்பிக்கைக்குரிய நபராக களமிறங்கும் ஆண்டனி வர்கீஸ், ஒரு கட்டத்தில் அவருக்கே எதிராக மாறுவதோடு, பழங்குடியின மக்களின் பாதுகாவலராக உருவெடுக்கிறார். இதனால் உருவாகும் மோதல்கள், துரோகம், பழிவாங்குதல் மற்றும் ஆக்ஷன் கலந்த போராட்டங்களின் பின்னணியில் நகரும் கதையே ‘காட்டாளன்’.
நாயகனாக நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ், முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாகவே படத்தில் வலம் வருகிறார். அவரது தோற்றம், உடல் மொழி மற்றும் சில எக்ஸ்பிரஷன்கள் மோகன்லாலை நினைவூட்டுகின்றன. குறைந்த வசனங்களுடன், பார்வை மற்றும் உடல் அசைவுகளின் மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு தெளிவாக தெரிகிறது.
வில்லனாக வரும் சுனில், வழக்கம்போல தனது கொடூரமான நடிப்பால் மிரட்டுகிறார். ஸ்டைலிஷ் வில்லனாக கபீர் துகான் சிங் கவனம் ஈர்க்கிறார். திடீரென களமிறங்கும் துஷாரா விஜயன், ஆக்ஷன் காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்.
பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டர் உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களது வேடங்களுக்கு ஏற்ற பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ரெனாடைவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. வனப்பகுதி, சண்டைக் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் அறிமுகங்களை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். பல இடங்களில் காட்சிகள் ஸ்டைலிஷாக இருந்தாலும், அதே பாணி தொடர்ந்து நீளுவதால் ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்துகிறது.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை முழுக்க முழுக்க அதிரடி பாணியில் அமைந்துள்ளது. சில இடங்களில் அது காட்சிகளுக்கு வலு சேர்த்தாலும், பல இடங்களில் அதிக சத்தமாக உணரப்படுகிறது. பாடல்களை விட பின்னணி இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீர் முகமதுவின் படத்தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது. இருப்பினும், திரைக்கதையில் வலுவான உள்ளடக்கம் இல்லாததால் அந்த வேகம் முழுமையாக ஈர்க்கவில்லை.
யானை தந்தம் கடத்தல் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் கதையில், அந்த பிரச்சினைகளின் ஆழம் பெரிதாக பேசப்படவில்லை. அதற்கு பதிலாக, ஸ்லோமோஷன் காட்சிகள், ஹீரோ பில்டப்புகள் மற்றும் நீளமான ஆக்ஷன் சீன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
‘கே.ஜி.எப்’, ‘புஷ்பா’, ‘விக்ரம்’ போன்ற படங்களின் தாக்கம் படத்தின் பல இடங்களில் தெரிகிறது. அதே பாணியில் ஒரு தனி சினிமா உலகத்தை உருவாக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் பவுல் ஜார்ஜ், காட்சிகளில் ஸ்டைலை அதிகம் நம்பியிருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், வலுவான திரைக்கதை மற்றும் உணர்ச்சி சார்ந்த இணைப்பு இல்லாததால், அந்த முயற்சி முழுமையாக வேலை செய்யவில்லை.
மொத்தத்தில், ‘காட்டாளன்’ ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் பிரம்மாண்ட மேக்கிங்கில் கவனம் செலுத்தியிருந்தாலும், கதையிலும் திரைக்கதையிலும் புதுமை இல்லாததால் சாதாரண ஆக்ஷன் அனுபவமாகவே முடிகிறது.
“காட்டாளன்” படத்திற்கு மதிப்பீடு 2.75/5
‘காட்டாளன்’ முழுமையாக கவரவில்லை.





