“அங்கீகாரம்” ஜே. பி. தென்பாதியான் இயக்கத்தில் ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான். இந்த படத்தில் கே.ஜே.ஆர், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து வரும் கே.ஜே. ராஜேஷ், தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தடகள விளையாட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைக்கிறார். சர்வதேச அரங்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனவுடன் பயணிக்கும் அவருக்கு, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டிய நிலையில் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. அனைத்து தகுதிகளும் இருந்தபோதிலும் அதிகார மட்டத்தில் நடைபெறும் அரசியல் மற்றும் சதிகளால் அவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது. இந்த அநீதியின் பின்னணியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் சேர்ந்து அமைச்சர் மன்சூர் அலிகானும் இருப்பது தெரியவருகிறது.
தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் குதிக்கும் ராஜேஷ், அதன் பின்னர் தொடர்ச்சியான சவால்களையும் உயிருக்கு அச்சுறுத்தலான சூழ்நிலைகளையும் சந்திக்கிறார். இந்த தடைகளை அவர் எவ்வாறு கடக்கிறார்? இறுதியில் தனது உரிமையையும் அங்கீகாரத்தையும் பெற்றாரா? என்பதே “அங்கீகாரம்” படத்தின் கதை.
நாயகனாக அறிமுகமாகியுள்ள கே.ஜே. ராஜேஷ், பல இடங்களில் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் நடிப்பு சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும், முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அனுபவம் அதிகரிக்கும் போது இன்னும் சிறப்பாக ஜொலிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை திறம்பட கையாண்டுள்ளனர். எந்த கதாபாத்திரமும் தேவையற்றதாகத் தோன்றாமல் கதையின் ஓட்டத்திற்கு துணை நிற்கின்றன.
ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் மனதில் நிற்கும் வகையில் இருப்பதுடன், பின்னணி இசை கதையின் உணர்வுகளையும் போராட்டத்தின் தீவிரத்தையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் விஸ்வநாத், விளையாட்டு மைதானக் காட்சிகள் முதல் உச்சக்கட்டக் காட்சிகள் வரை தரமான காட்சியமைப்புகளை வழங்கியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு திறமையான தடகள வீரன், தனது கனவுகளையும் இலக்குகளையும் அடைய எத்தகைய தடைகளையும் அநீதிகளையும் சந்திக்க வேண்டி வருகிறது என்பதை படம் ஆழமாக பதிவு செய்கிறது.
நீதிமன்றக் காட்சிகள் மற்றும் முக்கியமான மோதல் தருணங்கள் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த செட் வடிவமைப்பும் காட்சிகளின் தீவிரத்தன்மையும் கதைக்கு வலுசேர்க்கின்றன.
மையக் கருத்து வலுவாக இருந்தபோதிலும், சில முக்கிய தருணங்களில் உணர்ச்சி மற்றும் நாடகத் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக உருவாக்கியிருக்கலாம். சில காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு மனதில் பதியாமல் கடந்து செல்கின்றன.
விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, அரசியல் மற்றும் அதிகார அமைப்புகளின் தலையீடு, திறமையை விட செல்வாக்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை போன்ற பல முக்கியமான அம்சங்களை படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. குறிப்பாக விளையாட்டுத் துறையின் மறுபக்கத்தை நேரடியாக பேச முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.
“அங்கீகாரம்” படத்திற்கு மதிப்பீடு 3/5
சிந்திக்க வைக்கும் முக்கியமான படைப்பு





