“நல்ல படம்” திரை விமர்சனம்

“நல்ல படம்” சி. பிரபுராம் இயக்கத்தில் ஏ. அழகுபாண்டியன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சகிஷ்ணா சேவியர். இந்த படத்தில் ஹரிஷ் அழகுபாண்டியன், தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ராமா ராஜேந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குடிப்பழக்கத்தில் சிக்கியிருக்கும் குமரன், நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் போதையில் சுற்றிக்கொண்டிருப்பவர். அவரது வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று அம்மா, தங்கை மற்றும் காதலி தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால், குடிப்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கும் குமரனுக்கு, எதிர்பாராத விதமாக ஒரு புதிய பொறுப்பு வந்து சேர்கிறது. மதுப்பிரியர்களுக்கான சங்கம் ஒன்று உருவாக, அதன் தலைவராக குமரன் தேர்வு செய்யப்படுகிறார். இதனால் அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன்பிறகு நாடு முழுவதும் மதுவுக்கு தடை விதிக்கப்படும் சூழல் உருவாக, குமரனின் வாழ்க்கையும் அவனைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே “நல்ல படம்” படத்தின் கதை.

குமாரனாக நடித்திருக்கும் ஹரிஷ் போதையில் இருக்கும் இளைஞன், காதலன் மற்றும் சூழ்நிலைகளால் மாற்றம் அடையும் மனிதன் என பல்வேறு நிலைகளில் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவரது நடிப்பு ஓரளவு கவனம் ஈர்க்கிறது.

ஹரிஷை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனலட்சுமி, காதலுக்காக போராடும் காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகனின் அம்மாவாக நடித்துள்ள ரமா, கதாபாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், ஹரிஷின் நண்பர்களாக வரும் கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டு, படத்தின் பொழுதுபோக்கு அம்சத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

ராஜபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை ஒளிப்பதிவாளர் இனியன் ஜே. ஹாரிஸ் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள சஜிஷ்னா சேவியரின் இசை, படத்தின் உணர்வோட்டத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

முதல் பாதி காமெடி, காதல் மற்றும் குமரனின் குடிப்பழக்கத்தைச் சுற்றிய சம்பவங்களுடன் கலகலப்பாக நகர்கிறது. குடிப்பழக்கத்தை வெறுமனே கண்டிப்பதற்குப் பதிலாக, அதன் பின்னால் இருக்கும் மனிதனின் வாழ்க்கையை வேறொரு கோணத்தில் அணுகியிருப்பது கவனம் ஈர்க்கிறது.

இரண்டாம் பாதியில் மதுவிலக்கு என்ற கருத்தைச் சுற்றி கதை விரிவடைகிறது. மதுவைத் தடை செய்தால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பற்றிய சில சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெறுகின்றன. அதே நேரத்தில், சில இடங்களில் திரைக்கதை இன்னும் அழுத்தமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கலாம் என்ற உணர்வும் ஏற்படுகிறது.

மொத்தத்தில், மதுப் பழக்கத்தின் பாதிப்பை ஒரு சீரியஸ் பிரச்சாரப் படமாக மட்டும் சொல்லாமல், பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயன்றிருக்கிறது ‘நல்ல படம்’. கதையின் மையக்கருத்து சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் மற்றும் அழுத்தம் இருந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகரித்திருக்கும்.

“நல்ல படம்” படத்திற்கு மதிப்பீடு 3/5

“குடியைப் பற்றி பேசும் படம் மட்டுமல்ல… குடியால் மாறும் வாழ்க்கையைப் பேசும் “நல்ல படம்”!”