டி.ஆர். – பாக்யராஜ் கூட்டணியின் ஒரே படம்… “கன்னடத்து பைங்கிளி”!

எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்கும் புதிய திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

பன்முக கலைஞரான டி. ராஜேந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில், இசைஞானி இளையராஜா முதன்முறையாக பாடல் பாடியிருப்பது இப்படத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாகவும் ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. மேலும், டி. ராஜேந்தரும் பாக்யராஜும் இணைந்து பணியாற்றிய ஒரே திரைப்படம் இதுவாகும். படத்தில் கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் முழுவதும் பயணிக்கும் பாக்யராஜ், முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதுடன், இப்படத்தில் கணவன்–மனைவியாகவே நடித்திருப்பது கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

இப்படத்தின் மூலம் அமல் அஜித் மற்றும் ஆதியா ஆகிய புதுமுகங்கள் கதாநாயகன், கதாநாயகி கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் ‘கன்னடத்து பைங்கிளி’ படத்தின் வாயிலாக திரையுலகில் கால்பதிக்கின்றனர். தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் ஐயங்காரும் இப்படத்தில் நடிக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வேதா என்ற நடிகையும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர். சதீஷ் குமார் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சண்டைக்காட்சிகளுக்கான பயிற்சியை பவர் பாண்டியன் கவனித்துள்ளார்.

தமிழ்நாடு – கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990-களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘கன்னடத்து பைங்கிளி’ படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.