“ஹை” (Hi) விஷ்ணு இடவன் இயக்கத்தில் யாஷ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை ஜென் மார்ட்டின். இந்த படத்தில் நயன்தாரா, கவின், ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், பிரபு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்துகொண்ட தனது பெற்றோரைப் போல தானும் காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நாயகன் கவின். ஆனால், அவரது காதல் கைகூடாததால் பெற்றோர் அவருக்கு பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். காதலித்து மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், குடும்பத்தினரை கடிதம் மூலம் மிரட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
அதேபோல், தாயின் அன்பை அறியாமலும், தந்தையின் அரவணைப்பு இல்லாமலும் வளரும் நாயகி நயன்தாரா, திருமண பந்தத்துக்குள் சிக்காமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அவருக்கும் எதிர்பாராதவிதமாக திருமண ஏற்பாடு நடக்க, அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
சென்னையில் எதிர்பாராதவிதமாக சந்திக்கும் கவினும் நயன்தாராவும் நண்பர்களாகப் பழகத் தொடங்குகிறார்கள். தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காதலி நயன்தாராதான் என்று நினைக்கும் கவின், அவரை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால், காதல் மற்றும் திருமணம் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று நயன்தாரா கூறுவதால், தனது காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் வைத்துக் கொள்கிறார்.
இதற்கிடையே, சில மாதங்கள் கணவன்–மனைவியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை இருவருக்கும் ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நயன்தாராவை தனது காதல் வலையில் விழ வைக்க கவின் முயற்சி செய்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா என்பதுதான் ‘ஹை’ படத்தின் மீதிக்கதை.
காதல், குடும்பம், திருமணம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட எளிமையான கதையை, பெரிய திருப்பங்களோ அல்லது சிக்கலான சம்பவங்களோ இல்லாமல் இதமான உணர்வுகளுடன் சொல்லியிருப்பதுதான் படத்தின் முக்கிய பலம்.
கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக நடித்திருக்கும் கவின், காதலின் மீதான ஏக்கத்தையும், காதல் கைகூடாத ஏமாற்றத்தையும் தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நயன்தாராவுடன் இருக்கும் வயது வித்தியாசம் தெரியாத அளவுக்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், காமெடி காட்சிகளிலும் அளவான நடிப்பை கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
நயன்தாரா, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பையும் வசன உச்சரிப்பையும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். கிராமத்து பின்னணியைக் கொண்ட பெண்ணாக இருந்தாலும் நவீன உடைகள் மற்றும் தோற்றத்துடன் வலம் வருவதால், அந்த அடையாளம் பெரிதாக தெரியவில்லை. அவரது திரை இருப்பும் முதிர்ச்சியான நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இருப்பினும், சில காட்சிகளில் அவரது வயது முதிர்ச்சி கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒட்டாமல் இருப்பது சிறிய குறையாக தெரிகிறது.
கவினின் அம்மாவாக ராதிகா, அப்பாவாக கே.பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக பிரபு ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் சுஹாசினி மணிரத்னமும் கவனம் ஈர்க்கிறார்.
சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரின் காமெடி காட்சிகள் படத்தின் கலகலப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக சத்யனின் மைண்ட் வாய்ஸ் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளன. விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரின் திரை இருப்பு குறைவாக இருந்தாலும், காட்சிகளின் ஓட்டத்திற்கு உதவுகிறது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தை வண்ணமயமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நயன்தாராவின் திரை தோற்றத்தை பளிச்சென்று காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை காதல் காட்சிகளின் உணர்வுகளை அழகாக கடத்துகிறது.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, படத்தின் இலகுவான தன்மையை கெடுக்காமல் கதையை சீராக நகர்த்துகிறது. பெரிய திருப்பங்கள் இல்லாத கதையையும் சலிப்பு ஏற்படாத வகையில் தொகுத்திருப்பது சிறப்பு.
எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், மிகவும் எளிமையான காதல் கதையை அதே எளிமையான திரைக்கதையுடன் கையாண்டிருக்கிறார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பெரிய திருப்பங்களோ, பரபரப்பான எதிர்பார்ப்புகளோ இல்லாவிட்டாலும், கதாபாத்திரங்களின் இயல்பான செயல்பாடுகள், நகைச்சுவை மற்றும் இதமான காதல் உணர்வுகள் மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்க்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் ‘என்ன நடக்கப் போகிறது?’ என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதில் அல்ல; ‘இவர்கள் பயணம் எப்படியிருக்கும்?’ என்பதை ரசிக்க வைப்பதில் இருக்கிறது.
நயன்தாராவின் வயது முதிர்ச்சி சில காட்சிகளில் கவினுடனான ஜோடிப் பொருத்தத்தில் சிறிய தடையாக தெரிந்தாலும், கவினின் முதிர்ச்சியான, இயல்பான மற்றும் அளவான நடிப்பு அந்த குறையை பெருமளவு மறக்கடிக்கிறது.
மொத்தத்தில், பெரிய திருப்பங்கள் இல்லாவிட்டாலும், காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என இலகுவான மனநிலையில் ரசிக்கக்கூடிய படமாக ‘ஹை’ அமைந்திருக்கிறது.





