இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்துவரும் நடிகர் ஏகன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் தொடங்கி, காலப்போக்கில் முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறும் கதாபாத்திரத்தில் ஏகன் நடித்துள்ளார். கல்லூரிப் பின்னணியைக் கொண்ட இப்படத்தில் இளமைத் துள்ளல் நிறைந்த காதல், நகைச்சுவை ஆகியவற்றுடன் மனிதர்களின் மனநிலை மாற்றங்கள், உறவுகளின் ஆழம் மற்றும் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஏற்படும் அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஏகன் பகிர்ந்து கொண்டதாவது,
“எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் திரைப்படமாக ‘ஹைக்கூ’ இருக்கும் என்று நம்புகிறேன். கல்லூரி மாணவனாக இருக்கும் எனது கதாபாத்திரம், முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறுவதைத் திரையில் கொண்டு வருவது எனக்கு சவாலாக இருந்தது. ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் அற்புதமான நடிகைகள். இப்படத்தில் பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருவரும் அந்தக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
சித்து குமாரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் பல உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அவரது இசை மேலும் பலம் சேர்த்துள்ளது. நகைச்சுவை மற்றும் காதலைத் தாண்டி, ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான பல விஷயங்கள் உள்ளன. அதனுடன் ரசிகர்கள் நிச்சயம் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோரின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணியன் சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஆடியோ தரவரிசையில் முன்னணி இடங்களைப் பிடித்து கவனம் ஈர்த்துள்ளன. படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பி வெளியிடுகிறார்.





