சில திரைப்படங்களில் நடித்த அனுபவம், படப்பிடிப்பு முடிந்த பின்னரும் நடிகர்களின் மனதில் ஆழமாகத் தங்கிவிடும். அத்தகைய மறக்க முடியாத அனுபவத்தை ‘ஹைக்கூ’ திரைப்படம் தனக்கு அளித்துள்ளதாக நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான ‘கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் நோபடி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஸ்ரீதேவி, இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவான ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் தனது நடிப்புக்கு முன்னோட்டக் காட்சிகளிலும், திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்களிடமும் கிடைத்து வரும் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
படம் குறித்து ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டதாவது, “‘ஹைக்கூ’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, படத்தின் முன்னோட்டக் காட்சிகளிலேயே, குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரிடமிருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நடிகையாக நம் பணியை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நமக்கு மனநிறைவு தரும். அந்த உணர்வை ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் கொடுத்திருக்கிறது”.
மேலும், “இயக்குநர் யுவராஜ் கதையைச் சொன்னபோதே என் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான பல அடுக்குகள் இருப்பதை உணர்ந்தேன். சில நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், டப்பிங் பணிகளை முடித்த பிறகும்கூட அந்தக் கதாபாத்திரத்திலிருந்து என்னால் எளிதாக வெளிவர முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் என்னுள் சுமந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் எனக்கு பொக்கிஷம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவையும், சக்தி பிரணீஷ் பி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். கூடுதல் திரைக்கதைப் பணிகளில் ஹரிஹரன் ராம் பங்களித்துள்ளார். தமிழகத்தில் இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.





