டிசம்பரில் வெளியாகும் “லவ் இங்க்” – இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சுனில் ரெட்டி!

எம்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில், இன்றைய இளம் தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்கும் இப்படத்தை மேகராஜ் தாஸ் எழுதி இயக்குகிறார். ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

நவீன கால இளைஞர்களின் காதல் உணர்வுகள், உறவுகளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்லும் வகையில் ‘லவ் இங்க்’ உருவாகி வருகிறது. இளமைத் துடிப்புடன் கூடிய பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இப்படம், இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத்தினரும் ரசிக்கும் வகையில் அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடிகர் சுனில் ரெட்டி இணைந்துள்ளார். இதன் மூலம் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. படப்பிடிப்பு முடிவடைந்ததும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தீவிரப்படுத்தி, திட்டமிட்டபடி டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

இப்படத்தில் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ், சுனில் ரெட்டி, ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிக்கும் விரிவடைந்தது. தற்போது மீண்டும் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படம் குறித்து இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறுகையில், “இன்றைய ஜென்ஸீ தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற படமாக ‘லவ் இங்க்’ இருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். இளைஞர்கள் மட்டுமின்றி, குடும்பத்துடன் திரையரங்கில் அமர்ந்து ரசித்து மகிழக்கூடிய படமாகவும் இது அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

மேகராஜ் தாஸ் இயக்கும் இப்படத்தை ஏ. மகேந்திரன் வழங்க, எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தரண் குமார் இசையமைக்கிறார். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். புவன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

காதல், நகைச்சுவை மற்றும் சமகால உறவுகளின் சுவாரஸ்யங்களை ஒருங்கிணைக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.