இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் எனப் பன்முகத் திறமையுடன் திரையுலகில் இயங்கி வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவுடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘என் சி 51’. நவீன் சந்திரா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
‘லெவன்’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்ற நவீன் சந்திரா, தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், அவரது திரைப்பயணத்தில் 51-வது படமாக உருவாகும் ‘என் சி 51’, புதுமையான கதைக்களத்துடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
ஆர்.பி. பாலா பிலிம்ஸ் மற்றும் பி.ஜி. முத்தையா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் 26-ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் ஒன்றிணைந்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இப்படத்தில் நவீன் சந்திராவுடன் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைக்க, அஜய் மனோஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. கிராபோர்டு கலை இயக்கத்தையும், டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளையும் கவனித்துள்ளனர்.
மோகன் ராஜா பாடல்களை எழுதியுள்ளார். ராஜா நல்லையா ஒலிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார். அனீஷா ரெஹானா மற்றும் ஹகினோ ஷுன்சுகி கெவின் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
ஆர்.பி. பாலா இயக்கத்தில், நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘என் சி 51’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்டப் பணிகளை முடித்து விரைவில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைப் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





