பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மூன்வாக்’, 2026 தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ள இப்படம், நகைச்சுவை, இசை, நடனம் என குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் பண்டிகைக் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர், ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ஏ.ஆர். ரஹ்மான் நடிகராகவும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். அதேபோல், நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒரே படத்தில் 16 விதமான கதாபாத்திரங்களில் தோன்றவிருப்பது ‘மூன்வாக்’ படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
நகைச்சுவையுடன் இசை மற்றும் நடனத்தை முக்கியமாகக் கொண்டுள்ள ‘மூன்வாக்’, பண்டிகை காலத்தில் குடும்பத்துடன் திரையரங்கில் அமர்ந்து ரசிக்கக்கூடிய வண்ணமயமான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மனோஜ் என்.எஸ் எழுதி இயக்கியுள்ளார்.
படத்தின் தீபாவளி வெளியீடு குறித்து இயக்குநர் மனோஜ் என்.எஸ் கூறுகையில், “தீபாவளி என்றாலே குடும்பங்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் தருணம்தான். அதேபோன்ற மகிழ்ச்சியை திரையரங்கிலும் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ‘மூன்வாக்’ படத்தை உருவாக்கியதன் நோக்கம். சிரிப்பு, இசை, நடனம் என முழுமையான கொண்டாட்டமாக இப்படம் இருக்கும். இந்த தீபாவளியில் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் அனுபவத்தை ‘மூன்வாக்’ வழங்கும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘ஏத்து’, ‘டிங்கா’, ‘மகரினா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக இசை மற்றும் நடன ரசிகர்கள் மத்தியில் இப்பாடல்கள் கவனம் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள ‘மயிலே’ பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இசை, நடனம், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மூன்வாக்’, 2026 தீபாவளி வெளியீடுகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது.
படத்திற்கு அனூப். வி. ஷைலஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சேகர் வி.ஜே மற்றும் பியூஷ்-ஷாஜியா நடன இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். ஷனூ கலை இயக்குநராகவும், திவ்யா ஜார்ஜ் மற்றும் ஸ்வேதா ராஜு ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலக் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
‘மூன்வாக்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இப்படத்தின் சர்வதேச திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் இசை உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
2026 தீபாவளி பண்டிகையை சிரிப்பு, இசை மற்றும் நடனத்துடன் கொண்டாட வைக்கும் வகையில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’, திரையரங்குகளில் குடும்ப ரசிகர்களுக்கான கலகலப்பான விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





