ஆகஸ்ட் 20ல் வெளியாகும் “ஐ அம் கேம்” – முதல் பாடல் ரிலீஸ்!

துல்கர் சல்மான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘அருகே அருகே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளை எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். மலையாளப் பதிப்பிற்கு ஷார்பு, தெலுங்குப் பதிப்பிற்கு சனாரே, இந்திப் பதிப்பிற்கு நுமன் கோகர், கன்னடப் பதிப்பிற்கு ஹிருதயா சிவா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

வெளியான சில மணி நேரங்களிலேயே ‘அருகே அருகே’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாடலின் மென்மையான இசையும், அர்மான் மாலிக்கின் குரலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’, துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படமாகும். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சஜீல் பாபா, இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியான டிரெய்லர், அதிரடி ஆக்‌ஷன், பிரம்மாண்டமான காட்சிகள், பரபரப்பான சேசிங் காட்சிகள் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

படத்தில் துல்கர் சல்மான் இதுவரை காணாத வகையில் ஸ்டைலான மற்றும் மாஸான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதால், மலையாளத் திரையுலகின் முக்கியமான பிரம்மாண்ட வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிம்ஷி காலீத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

‘லோகா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படமாகவும், ‘RDX’ வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் ‘ஐ அம் கேம்’ உருவாகியுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.