வைக்கம் விஜயலட்சுமி குரலில் ‘ராட்சசியே’ – “மண்டவெட்டி” முதல் பாடல் வெளியீடு!

சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘மண்டவெட்டி’ படத்தின் முதல் பாடல் ‘ராட்சசியே’ வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் சிங்கிள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மர்மமான ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராட்சசியே’ பாடலுக்கு தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடலை உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார். தமிழ்மணி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

மெல்லிசையுடன் மர்ம உணர்வையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ‘ராட்சசியே’, ‘மண்டவெட்டி’ படத்தின் அமானுஷ்ய உலகை இசை வழியாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. பாடலின் இசையும், வைக்கம் விஜயலட்சுமியின் குரலும் இணைந்து கதையின் மாயத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பின்னணியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

சமீபத்தில் வெளியான டீசரில் தொன்மையான மர்மக் கதைகள், பதற்றத்தை ஏற்படுத்தும் காட்சிகள் மற்றும் படத்தின் அமானுஷ்ய உலகில் முக்கிய இடம் பெறும் ‘செஞ்சி சாமி’ குறித்த அறிமுகம் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகியுள்ள ‘ராட்சசியே’ பாடல், அந்த உலகத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கதையின் முக்கிய அம்சமாக ‘செஞ்சி’ என்ற உக்கிரமான உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள தொன்மம் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான அனுபவத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

‘மண்டவெட்டி’ படத்தில் கோமலி பிரசாத்துடன் சுபத்ரா ராபர்ட், அம்ரிதா, தேனப்பன், கஜராஜ், பிரேம் குமார், ரிதீஸ்வர் ராஜன், ஷிஜு ராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் பிரகாஷ் மணிதன் ஒளிப்பதிவாளராகவும், குணா பழனிசாமி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். கெளதம் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சங்கீதா சென் ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார்.

டோனி ஜே ஒலி கலவை பணிகளையும், பாலகங்காதரன் டிஐ கிரேடிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். விஜயன் விஎஃப்எக்ஸ் பணிகளை கவனித்துள்ளார். மகேந்திரன் கந்தசாமி தயாரிப்பு மேலாளராகவும், நர்மதா மேக்கப் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ‘ராட்சசியே’ பாடல் வெளியாகியுள்ள நிலையில், ‘மண்டவெட்டி’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.