பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியாகியுள்ளது. இதன் மூலம் படத்தின் இசைப்பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
ஸ்ரீ ராமரின் திருநாமத்தைப் போற்றும் பக்திப் பாடலாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, பாரம்பரிய ஆரத்தியின் ஆன்மீக உணர்வையும், நவீன திரையிசையின் அழகிய அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பாடல் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடல் முழுவதும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம், பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது.
படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா கூறுகையில், தலைமுறை தலைமுறையாக மனிதர்களின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் வழிகாட்டியாக விளங்குபவர் ஸ்ரீ ராமர் என்றும், அவரே ‘ராமாயணம்’ கதையின் மையம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிரமங்கள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகளில் ஸ்ரீ ராமரின் பாதையைப் பின்பற்றுவதும், மகிழ்ச்சியான தருணங்களில் அவரை நன்றியுடன் நினைவுகூருவதும் மக்களிடையே இருக்கும் ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துகிறது என்றும், அந்த உணர்விலிருந்தே ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் உருவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ராமாயணம்’ மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படை உணர்வு, மதிப்புகள் மற்றும் பக்தியில் இருப்பதாகக் கூறிய நமித் மல்ஹோத்ரா, முதல் பாடலின் மூலம் அந்த ஆன்மீக உணர்வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல விரும்பியதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீ ராமரை வழிபாட்டுக்குரியவராக மட்டுமின்றி, பாதுகாப்பையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வலிமையின் ஆதாரமாக கொண்டாடுவதே பாடலின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், ஸ்ரீ ராமரின் திருநாமத்தை எளிமையாகவும் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பதை மையமாகக் கொண்டதே ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் என தெரிவித்துள்ளார். பக்தி உணர்வை எந்த வகையிலும் குறைக்காமல், மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் பிரார்த்தனையாகவும் அதே நேரத்தில் ஒரு திரைப்படப் பாடலாகவும் இதை உருவாக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீபாலி சஹாய் மற்றும் ராகவ் கௌஷிக் ஆகியோர் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளனர். ராகேந்து மௌலி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலின் ஆன்மீக தன்மையை பாதுகாத்தபடியே இசை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களுக்கு அமைதியையும் ஆன்மீக உணர்வையும் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும், அனுமனாக சன்னி தியோலும், லட்சுமணனாக ரவி துபேயும் நடித்துள்ளனர்.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எட்டு முறை அகாடமி விருது வென்ற DNEG நிறுவனம் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகின்றன. யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தின் கூட்டுத் தயாரிப்பில் இணைந்துள்ளது. இந்தியாவைத் தவிர உலக நாடுகளில் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணம் – பாகம் 1’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





