தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா இன்று (23.07.2026) காலை சங்க அலுவலகத்தில் எளிமையான மற்றும் மரியாதைக்குரிய சூழலில் நடைபெற்றது.
நிகழ்வில், திரையுலகில் எண்ணற்ற படைப்புகளை வழங்கிய மூத்த எழுத்தாளரும், சமீபத்திய சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவருமான திரு. வி.சி. குகநாதன் தலைமையேற்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு உறுதிமொழி எடுக்கச் செய்து, தேர்வுச் சான்றிதழ்களை வழங்கி பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.
தேர்தல் அதிகாரி திரு. உமாசங்கர் பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திரு. சேரன் தலைவராகவும், திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் பொதுச் செயலாளராகவும், திரு. ஆர். சுந்தர்ராஜன் பொருளாளராகவும், மேலும் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்புக்குப் பிறகு உரையாற்றிய தலைவர் சேரன், சங்கத்தின் வளர்ச்சியும், உறுப்பினர்களின் நலனும் முன்னிலைப் பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய நிர்வாகம் ஒற்றுமை, வெளிப்படைத் தன்மை மற்றும் படைப்பாளிகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வி.சி. குகநாதன், தேர்தல் முடிந்துள்ள நிலையில் இனி எந்த அணிப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும், சங்கத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார். எழுத்தாளர்களின் நலனையும், சங்கத்தின் முன்னேற்றத்தையும் மட்டுமே இலக்காகக் கொண்டு ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என புதிய நிர்வாகிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு, பரஸ்பர மரியாதை, ஒற்றுமை மற்றும் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நிறைவடைந்தது.





