‘சீயான் 63’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியானது!

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனது புதிய திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிக பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. விக்ரமின் கதாபாத்திரத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டைட்டில் வீடியோ மூலம் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

சீயான் விக்ரமின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஏற்கனவே விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வெளியாகியுள்ள டைட்டில் வீடியோ ஆரம்பத்தில், ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. திருமண நிகழ்ச்சிக்கான சமையல் நடைபெறும் ஒரு வீட்டிற்குள் விக்ரம் வருவதில் இருந்து காட்சிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் இடம்பெறும் இந்த காட்சிகள், ஒரு இயல்பான குடும்பச் சூழலை அழகாக பதிவு செய்கின்றன.

ஆனால், வீடியோவின் போக்கு அடுத்த சில நொடிகளில் முற்றிலும் மாறுகிறது. அமைதியான குடும்பக் காட்சிகளில் இருந்து கதை திடீரென அதிரடி ஆக்ஷன் களத்திற்குள் நுழைகிறது. விக்ரம் ஒரு பூட்டப்பட்ட அறையைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு காயங்களுடன் கிடக்கும் சிலரை எதிர்கொள்வதும் இடம்பெறுகிறது. இதன் மூலம் விக்ரமின் கதாபாத்திரத்திற்கு பின்னால் இருக்கும் மர்மமான இன்னொரு முகத்தை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் டைட்டில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.

குடும்ப உணர்வுகளையும் ஆக்ஷனையும் மையமாகக் கொண்ட கமர்ஷியல் திரில்லர் படமாக ‘பவர்ஹவுஸ்’ உருவாகி வருகிறது. விக்ரமின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற அதிரடி காட்சிகளுடன், குடும்ப உறவுகளை மையப்படுத்திய உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பரபரப்பான திரைக்கதை ஆகியவை படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம், விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ISC ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ராஜீவன், வசனங்களை ஷான் கருப்புசாமி, சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பை பிருந்தா, படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்கத்தை சூர்யா ராஜீவன் ஆகியோர் கவனிக்கின்றனர்.

மேலும், ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா, ஸ்டில்ஸ் புகைப்படப் பணிகளை தேனி முருகன் மேற்கொள்கின்றனர்.

விக்ரமின் 63வது திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என வித்தியாசமான தலைப்பு சூட்டப்பட்டிருப்பதும், குடும்பக் கதையாகத் தொடங்கி அதிரடி ஆக்ஷனாக மாறும் வகையில் டைட்டில் வீடியோ அமைந்திருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி இந்த முறை என்ன மாதிரியான அனுபவத்தை வழங்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.