வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படம் தற்போது திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடல் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மர்மம், கொலை விசாரணை மற்றும் பரபரப்பான திருப்பங்களை மையமாகக் கொண்ட கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. ஓநைரோமன்சி பிக்சர்ஸ் மற்றும் மன்கி மேன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தில் வைபவ் திலக் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மமான ஒரு கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கும் அவருக்கு, வழக்கின் பின்னணியில் மறைந்திருக்கும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அடுத்தடுத்து தெரிய வருகின்றன. எதிர்பாராத திருப்பங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த விசாரணை என கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
கொலை வழக்கின் உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் திலக் எதிர்கொள்ளும் சவால்களும், அதனால் ஏற்படும் சம்பவங்களும் படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மர்மம் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் ‘மாறுவேஷம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக வியானா நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துள்ளன. தற்போது தணிக்கைக் குழுவின் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், வெளியீட்டுக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முதல் பார்வை மற்றும் பாடலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் ‘மாறுவேஷம்’ திரைப்படம் மர்மம் மற்றும் திரில்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





