தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘Rise of Mahasakthi – ரைஸ் ஆஃப் மகாசக்தி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர், படத்தின் பிரம்மாண்டத்தையும் கதைக்களத்தின் தனித்துவத்தையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இப்படம் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி.ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி மற்றும் கமர்ஷியல் என்டர்டெய்ன்மென்ட் அம்சங்களை இணைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை கோபி அமர்நாத் மேற்கொண்டுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி, முதல் பாகத்தை ரசித்த ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் வெளியாகியுள்ள டீசரில், பிரம்மாண்டமான காட்சிகள், புராணக் கூறுகள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் அதிரடியான தருணங்கள் இடம்பெற்றுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’, திரையரங்கில் பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ள டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், வெளியான சில மணி நேரங்களிலேயே டிஜிட்டல் தளங்களிலும் படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.





