ஆகஸ்ட் 26 வெளியீட்டுக்கு முன் ரசிகர்களை கவரும் “டாக்ஸிக்” படத்தின் ‘தடுமாறுதே’!

‘தபாஹி’ பாடல் உலகளவில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி இணைந்து, ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான **’தடுமாறுதே’**யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளன.

முதல் பாடலான ‘தபாஹி’ காதலின் தீவிரத்தையும் பரவசத்தையும் கொண்டாடிய நிலையில், புதிய பாடலான ‘தடுமாறுதே’ காதலின் மென்மை, ஏக்கம், மனதில் சொல்லப்படாமல் புதைந்திருக்கும் உணர்வுகள் மற்றும் உறவுகளின் நுட்பமான தருணங்களை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு காதல் உறவிலும் பல அடுக்குகள் இருப்பதையும், அவற்றின் உணர்ச்சி உலகத்தை இந்தப் பாடல் அழகாக எடுத்துரைக்கிறது.

யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடலில், ராயா – ரெபெக்கா கதாபாத்திரங்களின் உறவு புதிய கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையேயான காதல், விளையாட்டுத்தனமான தருணங்கள், உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஏக்கம் மற்றும் உணர்ச்சி மோதல்கள் ஆகியவை காட்சிகளின் மூலம் நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘தபாஹி’ பாடலில் ரசிகர்கள் கண்ட ராயாவின் அதிரடியான முகத்திற்கு மாறாக, இந்தப் பாடலில் அவரது மென்மையான, காதல் நிறைந்த மனநிலையும் வெளிப்படுகிறது.

இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா ஆகியோரின் கூட்டணியில் உருவான இந்த மெலோடி பாடலை, பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தனது குரலில் பாடியுள்ளார்.

இந்த பாடல் இந்தியா முழுவதும் வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் ‘மதோஷ்’, கன்னடத்தில் ‘மனமோஹகா’, தெலுங்கில் ‘மனசகதே’, தமிழில் ‘தடுமாறுதே’, மலையாளத்தில் ‘மதுமோகினி’ என்ற தலைப்புகளில் வெளியாகியுள்ளது. தமிழ் பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ள நிலையில், மற்ற மொழிகளில் பிரமோ மரவந்தே, அர்ஸ்லான் நிஜாமி, சையத் முராத் கிலானி, ராமஜோகய்யா சாஸ்திரி மற்றும் ராஜீவ் கோவிந்தன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்தியா வெளியீடுகளில் ஒன்றாக உருவாகியுள்ளது.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி பேசுகையில்,

”அர்ஸ்லான் நிஜாமி – ஃபஹீம் ஆகியோருடன் நான் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளதால் ‘தடுமாறுதே’ பாடல் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதிலும் ‘டாக்ஸிக்’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. மிகுந்த திறமைசாலியான சித்தார்த் பஸ்ரூருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் இப்பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார். ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான பயணத்தை இப்பாடல் அழகாக காட்சிப்படுத்துகிறது. காதல்- ஏக்கம் மற்றும் காதலின் விளையாட்டுத் தனமான உணர்வுகள் இதில் வெளிப்பட்டுள்ளன. நாங்கள் இந்தப் பாடலை உருவாக்கிய போது எவ்வளவு ரசித்தோமோ… அதே அளவு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

இந்த பாடல் குறித்து பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் பேசுகையில்,

”தடுமாறுதே ..என்பது சாதாரணமாக காதலில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது பிரிவை பற்றியது மட்டுமல்ல. இருவருக்கும் இடையே சொல்லப்படாமல் இருக்கும் உணர்வுகளை பற்றியது. இப்பாடல் முழுவதும் ஏக்கமும்… மென்மையான உணர்வுகளும்… இழையோடுகின்றன. வலியை மட்டும் வெளிப்படுத்தாமல்.. அந்த உண்மையான உணர்வுகளை எனது குரல் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது உணர்வுபூர்வமானது என்றாலும் .. இதில் படிப்படியாக அதிகரிக்கும் ஒரு தீவிர தன்மையும் உள்ளது. அதுவே எனக்கு இப்பாடலை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது” என்றார்.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது.

மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.