நடிகை நயன்தாராவும், நடிகர் கவினும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ மற்றும் அதன் காணொளி ரசிகர்களுக்காக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார்.
குடும்ப ரசிகர்களை கவரும் ஃபீல்-குட் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே., கே.எஸ். மயில்வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன்பு வெளியான ‘கன்னக் குழியா’ பாடல் டிஜிட்டல் தளங்களில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ரசகுல்லா’ பாடலும் அதன் வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் தனது குரலில் பாடியுள்ள இந்த மெலோடி பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடன அமைப்பு செய்துள்ளார்.
ஜென் மார்ட்டினின் இனிமையான இசை, அனிருத்தின் உற்சாகமான குரல், ‘ரசகுல்லா’ என்ற கவர்ச்சிகரமான வரிகள், வண்ணமயமான காட்சிகள், நயன்தாரா – கவின் இருவரின் திரை ரசாயனம் மற்றும் பிருந்தா மாஸ்டரின் அழகிய நடன வடிவமைப்பு ஆகியவை இணைந்து பாடலை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கச் செய்துள்ளன. இதனால், ‘ரசகுல்லா’ பாடல் தற்போது இணையத்தில் வேகமாக டிரெண்டாகி வருகிறது.





